search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும்- தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு
    X

    ஸ்டெர்லைட் வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும்- தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. அத்துடன், ஆலையையும் சுற்றுப்புற பகுதிகளையும் ஆய்வு செய்வதற்காக மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிபுணர் குழு கடந்த மாதம் 26-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், ஆலை நிர்வாகத்துக்கு உரிய நோட்டீஸ் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிபுணர் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம், மீண்டும் ஆலையை திறக்க உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில், குழுவினரால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

    இந்த அறிக்கை பரிசீலனை செய்த தேசிய பசுமை தீர்ப்பய தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், இரு தரப்பும் பதில் மனுக்கள் தாக்க்ல செய்ய உத்தரவிட்டார். அதன்படி தமிழக அரசு தரப்பிலும், ஸ்டெர்லைட் ஆலை தரப்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

    அதனைத் தொடர்ந்து இன்று தேசிய பசுமைத்  தீர்ப்பாயத்தில் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் மீண்டும் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Sterlite #NGT
    Next Story
    ×