search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேபரேலி தொகுதியில் சோனியாவை தோற்கடிக்க பிரதமர் மோடி வியூகம்
    X

    ரேபரேலி தொகுதியில் சோனியாவை தோற்கடிக்க பிரதமர் மோடி வியூகம்

    சோனியா காந்திக்கு எதிராக ரேபரேலி தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது. #BJP #Congress #PMModi #SoniaGandhi #Raebareli
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இங்கு மட்டும் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக அளவிலான தொகுதிகளை கைப்பற்றும் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்து வருகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா உத்தரபிரதேசத்தில் மட்டும் 75 தொகுதிகளை கைப்பற்றியது. அதுபோன்று அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளில் வெற்றிபெற தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில் பிரதமர் நரேந்திரமோடி இம்மாத இறுதியில் அதாவது வருகிற 15-ந்தேதிக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி செல்கிறார். அங்கு நவீன ரெயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் வர இருக்கின்ற எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகளை பார்வையிடுகிறார்.

    மேலும் அங்கு நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். அதையொட்டி உத்தரபிரதேச மாநில தலைமை செயலாளர் ஏ.பி.பாண்டே நேற்று முன்தினம் ரேபரேலி சென்று அந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதேபோன்று உத்தர பிரதேச கிராமப்புற வளர்ச்சி துறை மந்திரி மகேந்திரசிங் நேற்று ரேபரேலி சென்று பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டார். ஆனால் பிரதமர் மோடி வருகை தரும் தேதி இன்னும் முடிவாகவில்லை.

    இதற்கிடையே மோடியின் ரேபரேலி வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அங்குள்ள அமேதி தொகுதியையும் பா.ஜனதா நீண்ட நாட்களாக குறிவைத்துள்ளது.

    ஏனெனில் அது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெற்றிபெற்ற தொகுதியாகும். அவர் அடிக்கடி அங்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார். கடந்த தேர்தலில் ராகுல்காந்தியை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளராக தற்போதைய மத்திய மந்திரி ஸ்மிர்திராணி போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.



    ரேபரேலி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி வெற்றிபெற்ற தொகுதி. இறுதியாக அவர் கடந்த ஏப்ரல் மாதம் அங்கு சென்று மக்களை சந்தித்தார். அதற்கு முன்பு 2016-ம் ஆண்டு மத்தியில் அங்கு சென்றார்.

    2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது வாரணாசியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இருந்தாலும் அவருக்கு பதிலாக அவரது மகள் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    உடல்நலக் குறைவு காரணமாக வருகிற 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடமாட்டார் என அவரது மகள் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

    இருந்தாலும் சோனியா காந்திக்கு எதிராக ரேபரேலி தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அதற்கு அடிப்படையாகவே பிரதமர் மோடி ரேபரேலிக்கு பயணம் மேற்கொள்வதாக பா.ஜனதா தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சோனியா காந்திக்கு எதிராக கடைசி நேரத்தில் பா.ஜனதா வேட்பாளராக வக்கீல் அனில் அகர்வால் நிறுத்தப்பட்டார். இதனால் சோனியாகாந்தி 5 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2009-ம் ஆண்டு 4 லட்சத்து 82 ஆயிரம் வாக்குகள் பெற்று இருந்தார். #BJP #Congress #PMModi #SoniaGandhi #Raebareli
    Next Story
    ×