search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் காற்று மாசுவினால் மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு
    X

    இந்தியாவில் காற்று மாசுவினால் மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு

    இந்தியாவில் மரணம் அடைபவர்களில் 8-ல் ஒருவர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள். இது புகை பிடிப்பதால் ஏற்படும் உயிர் இழப்பை விட அதிகமாகும். #AirPollution #India
    புதுடெல்லி:

    காற்று மாசுவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இங்கு தொடர்ந்து காற்று மாசு அதிகரித்தபடி இருக்கிறது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இது சம்பந்தமாக ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் மரணம் அடைபவர்களில் 8-ல் ஒருவர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள். இது, புகை பிடிப்பதால் ஏற்படும் உயிர் இழப்பை விட அதிகமாகும்.

    காற்று மாசு குறிப்பிட்ட அளவுக்கு குறைந்து இருந்தால் இந்தியாவில் சராசரி வாழ்க்கையானது 1.7 வருடங்கள் அதிகரிக்கும். ஆனால், காற்று மாசு உயர்ந்து வருவதால் இதை பாதித்துள்ளது. காற்று மாசுவினால் ஏராளமானோர் உயிர் இழப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களையும் அவை ஏற்படுத்துகின்றன.

    நாட்டில் 77 சதவீத மக்கள் மோசமான காற்று மாசுவை சந்திக்கும் நிலை இருக்கிறது.



    அதாவது, காற்றில் எவ்வளவு மாசு இருந்தால் பாதுகாப்பானது என்ற வரையறை உள்ளது. அதைவிட அதிகமாக காற்றில் மாசு கலந்துள்ளது. வீதிகளில் மட்டும் அல்ல, வீட்டுக்குள்ளும் காற்று மாசு மோசமாக இருக்கிறது.

    கடந்த ஆண்டு மட்டுமே காற்று மாசுவினால் 12 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அதில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் வீட்டுக்குள் ஏற்பட்ட காற்று மாசுவினால் உயிர் இழந்தவர்கள் ஆவர்.

    இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 26 சதவீத குழந்தைகள் காற்று மாசுவினால் மரணம் மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு மட்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் காற்று மாசுவினால் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

    70 வயதுக்குள் மரணம் அடைபவர்களில் பாதி பேர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

    இந்தியாவில் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தான் காற்று மாசு மோசமாக இருக்கிறது. குறிப்பாக பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காற்றில் அதிக அளவு மாசு கலந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AirPollution #India
    Next Story
    ×