search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கு 50 இடங்களே கிடைக்கும் - சச்சின் பைலட்
    X

    ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கு 50 இடங்களே கிடைக்கும் - சச்சின் பைலட்

    ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கு 50 இடங்களுக்கு மேல் கிடைக்காது. அந்த கட்சிக்கு தோல்வி உறுதி என்று மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சச்சின் பைலட் கூறினார். #SachinPilot #RajasthanAssemblyElection
    ஜெய்ப்பூர்:

    200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு வருகிற 7-ந் தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதாவின் கோட்டையாக கருதப்படும் ராஜஸ்தானில் 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு பா.ஜனதா 2013-ம் ஆண்டு மீண்டும் போராடி காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    தற்போது நடைபெறும் தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்க கடுமையாக போராடுகிறது. அங்கு பா.ஜனதாவுக்கு செல்வாக்கு இருந்தாலும் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேசிந்தியா மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க கடும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் நிலவரம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சச்சின் பைலட் அளித்த பேட்டி வருமாறு:-

    கடந்த 5 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கடந்த 11 மாதங்களாக டெல்லியில் இருந்து வந்த பா.ஜனதா தலைவர்கள்தான் இங்கு பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் 4 வருடங்களில் செய்ய முடியாததை 11 மாதங்களில் செய்ய முடியுமா?

    இந்த 5 ஆண்டுகளில் வறட்சி, வெள்ளம், கற்பழிப்பு, கொலை, சமூக மோதல்கள் என பல சம்பவங்கள் நடந்தன. அப்போது எந்த தலைவரும் டெல்லியில் இருந்து வந்து பார்க்கவில்லை. எனவே மக்கள் பா.ஜனதாவை தோற்கடித்து காங்கிரசை ஆட்சியில் அமர்த்த முடிவு செய்து விட்டார்கள்.

    பா.ஜனதாவுக்கு 50 இடங்களுக்கு மேல் கிடைக்காது. அந்த கட்சிக்கு தோல்வி உறுதி. பிரதமர் மோடி, அமித்ஷா தங்களது பண பலத்தை காட்டுகிறார்கள். ஆனால் எதுவும் பலிக்காது. மக்கள் பா.ஜனதாவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

    முதல்-மந்திரி வசுந்தரா திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டுகள் போதாது என்று கூறுகிறார். அரசு நினைத்தால் முன்கூட்டியே எதையும் செய்யலாம். ஆனால் வசுந்தராவின் அகந்தை, புறக்கணிப்பு, அதிகார குவிப்பு போன்றவற்றாலும் சுரங்கம், மணல் மற்றும் சாராய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாலும் மக்கள் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க மாட்டார்கள்.

    உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் இங்கு வந்து மதப்பிரசாரம் செய்தார். அவர் பதவி ஏற்றபோது என்ன உறுதிமொழி எடுத்தார் என்பது மக்களுக்கு தெரியும். அதை மீறும் வகையில் பிரசாரம் செய்தார்.

    பா.ஜனதா மத உணர்வை தூண்டி விட்டு ஆதாயம் தேடப்பார்க்கிறது. மாநிலத்தின் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு போன்றவை பற்றி ஒரு போதும் பேசியது கிடையாது. அதை புறக்கணித்ததற்கு காரணம் அவர்கள் அதில் எந்த சாதனையும் படைக்கவில்லை.

    பா.ஜனதா இப்போது காங்கிரசை ஒரு குடும்ப கட்சி என்று விமர்சிக்கிறது. ஏன் வசுந்தராவின் தாய் ஒரு அரசியல்வாதியாக இருந்தவர்தானே. அவரது வாரிசுதான் வசுந்தரா. இவரின் சகோதரிகளும் அரசியலில் தான் இருக்கிறார்கள். மகனும் ஒரு அரசியல்வாதிதான். இப்படி வசுந்தரா குடும்பமே அரசியலில் இருப்பது பிரதமர் மோடியின் பார்வைக்கு தெரியவில்லை.

    காங்கிரஸ் அப்படி அல்ல. இங்குதான் ஜனநாயகம் நிலவுகிறது. இதற்கு 130 ஆண்டு கால வரலாறு உள்ளது. அதன் தலைவர்களாக நாடு முழுவதிலும் இருந்து பலர் இருந்துள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SachinPilot #RajasthanAssemblyElection

    Next Story
    ×