search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்
    X

    பீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்

    பீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #Criminalcases #casesagainstMPMLAs #specialcourts
    புதுடெல்லி:

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட  அரசியல்  தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க கோரி, வழக்கறிஞரும் பா.ஜ.க. தலைவருமான அஸ்வினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி தண்டனை அளிப்பதில் நீண்டகால இழுத்தடிப்பு நடந்து வருவதால் கிரிமினல்கள் மக்கள் பிரதிநிதிகளாக உலா வருகின்றனர். எனவே, இவர்கள் மீதான வழக்குகளில் விசாரணையை விரைவுப்படுத்தி, தண்டித்து அரசியலில் ஈடுபட தடை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா ‘அமிகஸ் கியூரி’யாக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதிலும் பல்வேறு நீதிமன்றங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 4122 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் அதிகபட்சமான வழக்குகள் பீகார் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், பீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. தேவை ஏற்படும் மாவட்டங்களில் எத்தனை சிறப்பு நீதிமன்றங்களை வேண்டுமானாலும் அமைத்து கொள்ளலாம்.

    தற்போது, மாநில ஐகோர்ட் மற்றும் சில சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் அனைத்தும் புதிதாக அமைக்கப்படும் மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். இந்த நீதிமன்றங்களில் ஆயுள் தண்டனைக்கு வாய்ப்புள்ள குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்கப்பட வேண்டும்.

    இவ்வகையில், பீகார் மற்றும் கேரளாவில் மாவட்டங்கள்தோறும் அமைக்கப்படும் புதிய சிறப்பு நீதிமன்றங்களின் பட்டியலை பாட்னா மற்றும் கேரளா ஐகோர்ட்டுகள் வரும் 14-ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #Criminalcases #casesagainstMPMLAs #specialcourts #Biharpecialcourts #Keralapecialcourts
    Next Story
    ×