search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை நல்லதொரு முடிவு - ரிசர்வ் வங்கி கவர்னர்  கருத்து
    X

    பிரதமர் நரேந்திர மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை நல்லதொரு முடிவு - ரிசர்வ் வங்கி கவர்னர் கருத்து

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நல்லதொரு முடிவு என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கூறினார். #RBI #UrjitPatel #ParliamentPanel
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி இரவு, நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றியபோது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக அறிவித்தார். ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் அன்று இரவு முதல் செல்லாது என அவர் அறிவித்தது, கருப்பு பண முதலைகள் முதல் சாமானிய மக்கள் வரை அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    அந்த ரூபாய் நோட்டுகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் மாற்றுவதற்கு வங்கிகளில், ஏ.டி.எம். மையங்களில் மக்கள் பல மணி நேரம் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு இன்று வரை ஆளாகி வருகிறது.



    இந்த நிலையில், நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம், அதன் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.

    இந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாரதீய ஜனதா தலைவர்கள் நிஷிகாந்த் துபே, ரத்தன்லால் கட்டாரியா, பிஜூ ஜனதாதள தலைவர் மகாதேவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த கூட்டம், பண மதிப்பு நடவடிக்கையினால் எதிர்பார்க்கப்பட்ட நன்மைகள், இந்திய ரிசர்வ் வங்கியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், வங்கிகளின் வாராக்கடன்களை ஒழித்துக்கட்ட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பிற்கு இணங்க அவரும் கலந்து கொண்டார். இந்த நிலைக்குழுவின் முன்பாக அவர் ஆஜரானது இது மூன்றாவது முறை.

    இந்த கூட்டத்தில் அவர், பிரதமர் நரேந்திர மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்தார்; இந்த நடவடிக்கை, ஒரு நல்ல முடிவு என அவர் குறிப்பிட்டார்; வாராக்கடன் பிரச்சினையில் மெதுவாக முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

    மத்திய அரசின் நிதிக்கொள்கையில் ரிசர்வ் வங்கிக்கு எந்த முரண்பாடும் இல்லை எனவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரிசர்வ் வங்கி வைத்துக்கொள்ள வேண்டிய ரொக்க கையிருப்பு அளவு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்துதல் உள்ளிட்டவற்றில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு முன்னிலையில் உர்ஜித் படேல் ஆஜரானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அதே போன்று, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஏற்கனவே கருத்து தெரிவிக்கையில், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நல்ல யோசனை அல்ல என்று அரசுக்கு நான் தெளிவுபடுத்தினேன். புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 87½ சதவீத நோட்டுகளை மதிப்பிழக்க செய்தபோது, அதை நன்றாக திட்டமிடாமல் செயல்படுத்தி விட்டனர்” என்று கூறிய நிலையில், தற்போதைய கவர்னர் உர்ஜித் படேல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.  #RBI #UrjitPatel #ParliamentPanel
    Next Story
    ×