search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு
    X

    ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. #NGT #NationalGreenTribunal #SterlitePlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனதை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

    அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.



    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த செப்டம்பர் 10-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு கடந்த 26-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர், சென்னை நகரிலும் விசாரணை மேற்கொண்டனர்.

    நேற்று முன்தினம் இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனியாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், உறுப்பினர் நீதிபதிகள் ரகுவேந்திர ரத்தோர், எஸ்.பி.வாங்டி, கே.ராமகிருஷ்ணன், நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (புதன்கிழமை) ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    தீர்ப்பாயத்தின் இணையதளத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. இன்று வழங்கப்போகும் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமா அல்லது மீண்டும் திறக்கப்படுமா என்பது தீர்மானிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #NGT #NationalGreenTribunal #SterlitePlant 
    Next Story
    ×