search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதையும் செய்யவில்லை- மோடி குற்றச்சாட்டு
    X

    வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதையும் செய்யவில்லை- மோடி குற்றச்சாட்டு

    வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என்று மிசோரம் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். #pmmodi #congress #Mizoramassemblyelection
    லுங்லெய்(மிசோரம்)

    40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் மிசோரமில், பா.ஜனதா 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இன்னொரு பிரதான கட்சியான சோரம் மக்கள் இயக்கம் அதன் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி சோரம்தங்கா தலைமையில் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மிசோ தேசிய முன்னணி என்ற பெயரில் களம் காண்கிறது.

    தேர்தலையொட்டி தலைவர்கள் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோர் பிரசாரத்தை முடித்து விட்டனர். இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று மிசோரம் சென்றார்.

    அங்குள்ள லுங்லெய் நகரில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேசும்போது “நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் தொடர்ந்து கையாண்டு வருகிறது. தற்போது அதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர். அதனால்தான் ஒரு காலத்தில் அதிக மாநிலங்களை ஆண்ட காங்கிரஸ் இன்று 2, 3 மாநிலங்களை மட்டும் ஆளும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. தற்போது மிசோரம் மக்களுக்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நீங்களும் இங்கிருந்து காங்கிரசை விரட்டி அடியுங்கள்” என்றார்.

    காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர் கடந்த ஆகஸ்டு மாதம், ஒரு நிகழ்ச்சியில் வடகிழக்கு மாநில மக்கள் அணியும் தொப்பியை பிரதமர் மோடி அணிந்திருந்ததை கேலி செய்யும் விதமாக பேசியிருந்தார்.

    இதை தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக் காட்டிய மோடி, “பொதுவாகவே வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரத்தை கிண்டல் செய்யும் போக்கு காங்கிரசிடம் உண்டு. இது வேதனையளிக்கும் விஷயம். அக்கட்சியின் ஒரு தலைவர் வடகிழக்கு மாநில மக்கள் அணியும் தொப்பி குறித்து தவறாக பேசினார். அவர்களை வெளியில் இருந்து வந்தவர்கள் என்றார். உங்களுடைய நம்பிக்கைகள், லட்சியங்கள் எல்லாம் காங்கிரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக காங்கிரஸ் இங்கே போட்டியிடவில்லை. அதிகாரத்தை கைப்பற்றவே மோதுகிறது” என்று கடுமையாக சாடினார்.

    மேலும், “கடந்த 4½ ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் பரந்த, விரிந்த நோக்குடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கோ, கலாசாரத்துக்கோ எதையும் செய்யவில்லை“ என்று குற்றம் சாட்டினார். #pmmodi #congress #Mizoramassemblyelection
    Next Story
    ×