search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஒருவருக்கு மரண தண்டனை
    X

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஒருவருக்கு மரண தண்டனை

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்முறையாக இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. #antiSikhriotscase
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்முறையாக இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.



    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்புக்கு டெல்லியில் உள்ள பல்வேறு சீக்கிய அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகளும் முன்னர் முடித்து வைக்கப்பட்டன.

    இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

    இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை இன்று ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #antiSikhriotscase #Delhicourt #firstdeathsentence #deathsentence
    Next Story
    ×