search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்டியால் எதிர்பார்த்த பலன் கிடைத்ததா? சிஏஜி அறிக்கை விரைவில் தாக்கல்
    X

    ஜிஎஸ்டியால் எதிர்பார்த்த பலன் கிடைத்ததா? சிஏஜி அறிக்கை விரைவில் தாக்கல்

    ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு எதிர்பார்த்த நன்மைகள் கிடைத்ததா? என்பது குறித்து மத்திய தணிக்கை குழு விரைவில் பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறது. #GST #CAGAuditReport

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடைமுறை கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கனவே அமலில் இருந்த 17 வகையான வரிகள் நீக்கப்பட்டு ஜி.எஸ்.டி. வரியின் கீழ் ஒரே வரியாக கொண்டு வரப்பட்டது.

    5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகையாக ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்பட்டது. இதில் வியாபாரிகளும், தொழில் துறையினரும் சுட்டிக்காட்டிய குறைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு பல அத்தியாவசிய பொருட்கள் குறைந்த வரி விகிதத்தில் கொண்டு வரபப்பட்டன.

    மக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கும், கைவினைப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டபோது பல எதிர்பார்ப்புகள் ஏற்பட்டது. முதலில் தற்காலிக பண வீக்கம் அதிகரித்தாலும் அதன்பிறகு பொருட்களின் விலை குறைந்து பணவீக்கம் கட்டுக்குள் வரும்.

    ஜி.எஸ்.டி. வரியால் பொருட்களின் உற்பத்தி செலவு குறையும். மக்கள் அதிகமாக பொருட்களை வாங்கி பயனடைய முடியும். இதனால் நிறுவனங்களின் லாபம் அதிகரித்து அது முதலீடாக மாறும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி வேகம் எடுக்கும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாகும்.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு எதிர்பார்த்த நன்மைகள் கிடைத்ததா என்பது குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு நடத்தியது.

     


    இதில் ஜி.எஸ்.டி., பதிவு செயல்படுத்தும் உரிமை, கணக்கை உரிய முறையில் தாக்கல் செய்து வரியை திரும்ப பெறுவதற்கான நடைமுறைகள், ஜி.எஸ்.டி. தொகுப்பு முறை திட்டம், வரி செலுத்துதல் எந்த அளவுக்கு எளிதாக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி.யால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள், எதிர் காலத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சி ஏற்படும் என்பது உள்ளிட்ட ஜி.எஸ்.டி.யின் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணைய அலுவலகத்துக்கும், கணக்கு தணிக்கை குழுவினர் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11-ந்தேதி தொடங்க இருக்கிறது. அப்போது இந்த ஆய்வு பற்றிய அறிக்கையை மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. #GST #CAGAuditReport

    Next Story
    ×