search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் - வீடியோ கான்பரன்சிங் மூலம் லாலுவை ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு
    X

    ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் - வீடியோ கான்பரன்சிங் மூலம் லாலுவை ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு

    ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள லாலு பிரசாதை வரும் டிசம்பர் 20-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #IRCTCScam #Lalu
    புதுடெல்லி:

    ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
     
    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.



    இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் ராப்ரி தேவி, தேஜஸ்வ யாதவ் உள்ளிட்ட அனைவருக்கும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. அத்துடன் நவம்பர் 19-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் லாலு பிரசாத் யாதவை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

    அதன்படி ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கு இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஆனால், லாலு பிரசாத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் லாலுவை மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #IRCTCScam #Lalu
    Next Story
    ×