search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐ.சி.எப். தயாரித்த செமி புல்லட் ரெயில் சோதனை வெள்ளோட்டம் நடந்தது
    X

    சென்னை ஐ.சி.எப். தயாரித்த செமி புல்லட் ரெயில் சோதனை வெள்ளோட்டம் நடந்தது

    சென்னை ஐ.சி.எப். தயாரித்த என்ஜின் இல்லாத முதல் செமி புல்லட் ரெயில் சோதனை வெள்ளோட்டம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று வெற்றிகரமாக நடந்தது.#ICF #SemiHighSpeedTrain #Train18
    லக்னோ:

    இந்தியாவில் ஓடும் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து வெளிநாடுகளில் உள்ளதைப்போல் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் புல்லட் ரெயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அவ்வகையில், கடந்த ஆண்டில் பல வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக அதிவிரைவு ரெயில் பெட்டிகள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது.

    ஆனால், வெறும் 315 பெட்டிகளை தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வராததால் வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு ரெயில்களுக்கான பெட்டிகளை சென்னை வில்லிவாக்கம் அருகில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது.



    'Train-2018' என பெயரிடப்பட்டுள்ள இந்த ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு முதல் ரெயில் அழகாக நகர்ந்து செல்லும் வீடியோ யூ டியூப் மற்றும் சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியானது.

    முற்றிலும் குளிர்சாதன வசதி, பயோ கழிப்பறைகள், ரெயிலின் உள்ளே இலவச வைஃபை வசதி, விமானத்தில் உள்ளதுபோல் தானியங்கி கதவுகள், சொகுசான இருக்கைகள், ஓடும் ரெயிலினுள் முதல் பெட்டியில் இருந்து கடைசி பெட்டிவரை நடந்து செல்லும் வசதி, எவ்வளவு வேகத்தில் சென்றாலும் கடினமான அதிர்வு மற்றும் குலுங்கல்களை தவிர்க்கும் ஷாக் அப்சார்பர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ரெயில் பெட்டிகளில் உள்ளன.

    மேலும் இந்த ரெயிலில் உள்ள இருக்கைகள் 360 டிகிரி கோணத்தில் சுழலும் வசதி கொண்டவை. இதன் மூலம் ரெயில் எந்த திசையை நோக்கி செல்கிறதோ, அதற்கேற்ப நமது விருப்பம் போல் திரும்பி அமர்ந்தவாறு பயணிக்கலாம்.



    இதர ரெயில்களில் உள்ளதைப்போல் பெட்டிகளில் இருந்து என்ஜினை கழற்றி, மாட்டுவது போலன்றி, 16 பெட்டிகளுடன் என்ஜினும் ஒரே அமைப்பாக இணைந்தே இருக்கும் என்பதும் இதன் சிறப்பம்சமாகும். இதற்கென தனியாக என்ஜின் கிடையாது.

    விரைவில் டெல்லி-லக்னோ அல்லது டெல்லி-சண்டிகர் வழித்தடத்தில் இந்த முதல் செமி புல்லட் ரெயில் மூலம் பயணிகள் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மோராதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி தண்டவாளத்தில் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. ரெயில்வே துறையின் சிக்னல், பாதுகாப்பு பிரிவு மற்றும் பொறியாளர்கள் குழுவினர் இந்த வெள்ளோட்டத்தை பார்வையிட்டு திருப்தி தெரிவித்துள்ளனர்.

    இதைதொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா - சாவாய் மோதோப்பூர் வழித்தடத்தில் இந்த ரெயில் மணிக்கு 200 கிலோமீட்டர் என்னும் அதிகபட்ச வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும். பின்னர், பயணிகளுக்கான இந்த அதிநவீன ரெயில் சேவை தொடங்கும்.  #ICF #SemiHighSpeedTrain #Train18
    Next Story
    ×