search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு சென்ற கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளருக்கு 14 நாள் காவல்
    X

    இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு சென்ற கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளருக்கு 14 நாள் காவல்

    சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டுடன் சென்ற கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரனை கைது செய்த போலீசார் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை விழாவிற்காக கோவில் நடை திறக்கப்பட்டது. இனி மகரவிளக்கு பூஜை முடியும் வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    இதற்கிடையில், சபரிமலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பெண் தலைவர் சசிகலா நேற்று முன்தினம் இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு செல்ல வந்தார். பம்பையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    சபரிமலை செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் போலீசாருக்கும், சசிகலாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பம்பையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். சசிகலாவை அவர்கள் கைது செய்தனர்.

    சசிகலா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சி மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் குதித்தனர்.

    இந்நிலையில், கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரன் தனது காரில் மேலும் இருவருடன் ஐயப்பனை தரிசிப்பதற்காக இருமுடி கட்டுடன் சென்று கொண்டிருந்தார். 



    அவரை நிலக்கல் அருகே பத்தினம்திட்டா போலீஸ் சூப்பிரண்ட் யாதிஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார். ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் கார் நுழைவுக்கான அனுமதி சீட்டும், தரிசனத்துக்காக கோவில் நிர்வாகத்திடம் ரசீதும் பெற்றிருக்கும் எங்களை ஏன் தடை செய்கிறீர்கள்? என்று போலீசாரிடம் சுரேந்திரன் வாக்குவாதம் நடத்தினார்.

    தரிசனத்துக்கான ரசீதை உங்களிடம் நான் ஏன் காட்ட வேண்டும்? காட்டினால் நீங்கள் பூஜை செய்வீர்களா? என்றும் அவர் போலீசாரை பார்த்து கேட்டார். இப்படி வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேந்திரனை கைது செய்த போலீசார், சிட்டார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர், அவரை மருத்துவ பரிசோதனைக்காக பத்தினம்திட்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அம்மாவட்ட மாஜிஸ்திரேட் இல்லத்தில் இன்று அதிகாலை சுரேந்திரன் ஆஜர்படுத்தப்பட்டார். 

    அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, சுரேந்திரன் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. தொண்டர்கள் திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள மாநில அரசின் தலைமை செயலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கொச்சி, கோட்டயம், கன்னூர் மாவட்டங்களிலும் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணியில் இருந்து வாகனங்களை மறித்து சாலை மறியல் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான, பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. #KeralaStrike #Sabarimala #KSurendranarrested  #KSurendranremanded
    Next Story
    ×