search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு - 10 ஆயிரம் போலீசார் குவிப்பு
    X

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு - 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

    சபரிமலையில் மண்டல பூஜைக்காக நாளை நடை திறக்கப்படுவதையொட்டி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Sabarimala #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

    மண்டல பூஜை, மகர விளக்கு விழாக்களின்போது ஐயப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடக்கிறது.

    இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அப்போது புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் 18-ம் படி ஏறி பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவிலின் சாவி புதிய மேல்சாந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் 17-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. நடை திறந்ததும் ஐயப்பனுக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    அப்போது முதல் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். 17-ந்தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக கோவில் நடை திறந்திருக்கும்.

    டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை விழா முடிந்த பின்பு கோவில் நடை அடைக்கப்படும். 3 நாட் களுக்கு பிறகு டிசம்பர் 30-ந்தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அதுவரை கோவில் நடை திறந்திருக்கும்.

    மண்டல பூஜையை காட்டிலும் மகரவிளக்கு பூஜைக்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள்.

    சபரிமலையில் தொடர்ச்சியாக 62 நாட்கள் நடை திறந்திருக்கும் என்பதால் கோவிலுக்கு வரும்பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வழக்கமாக சபரிமலையின் அடிவாரமான பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானத்திற்கு வரிசையாக அனுப்பப்படுவார்கள்.

    இம்முறை பம்பைக்கு பதில் நிலக்கல் பகுதியில் இருந்தே பக்தர்களை வரிசையில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் சபரிமலைக்கு இளம்பெண்கள் மற்றும் பெண்ணீய ஆர்வலர்கள் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சபரிமலை ஆச்சாரத்திற்கு எதிராக ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை தடுப்போம் என ஐயப்ப பக்தர்கள் அறிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு வெளியான பின்பு 2 முறை கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்கு வந்த பெண்கள் தடுக்கப்பட்டனர். அப்போது போராட்டங்களும், தடியடியும் நடந்தது.

    இப்போது மீண்டும் நடை திறக்கப்பட இருப்பதால் பெண்கள் அதிகளவு வருவார்கள் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், போராட்டக்காரர்களை சமாளிக்கவும் இந்த முறை சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி, சபரிமலை செல்லும் அனைத்து பாதைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போலீசாரிடம் முன் அனுமதி பெற்றே சபரிமலை செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக பத்தினம் திட்டா, நிலக்கல், எரிமேலி, பம்பை என அனைத்து பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சபரிமலை கோவில் ஆச்சாரப்படி 50 வயதுக்குட்பட்ட பெண் போலீஸ் அதிகாரிகள் யாரும் சபரிமலையில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுவதில்லை. மேலும் சன்னிதானம் பகுதியில் எந்த பெண் போலீசாருக்கும் பாதுகாப்பு பணி வழங்கப்படுவதில்லை.

    ஆனால் இம்முறை கோவிலின் சன்னிதானம் வரை பெண் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 2 ஐ.ஜி.க்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் சபரிமலையிலேயே முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். #Sabarimala #SabarimalaTemple
    Next Story
    ×