search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் தரிசன வரிசையில் மாற்றம் செய்ய ஏற்பாடு - தேவஸ்தான அதிகாரி தகவல்
    X

    திருப்பதியில் தரிசன வரிசையில் மாற்றம் செய்ய ஏற்பாடு - தேவஸ்தான அதிகாரி தகவல்

    திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள யானை கேட்டில் இருந்து கோவில் மகா துவாரம் வரை பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க, தரிசன வரிசையில் மாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார்.

    திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள யானை கேட்டில் இருந்து கோவில் மகா துவாரம் வரை பக்தர்கள் வரிசையில் செல்லும்போது நெரிசல் ஏற்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க, தரிசன வரிசையில் மாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருமலையில் புதிதாக பூந்தி தயாரிக்கும் கூடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    லட்டு கவுண்ட்டர்களில் ஸ்கிரீன் போர்டுகள் வைக்கப்பட உள்ளன. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட்) வழங்கும் இடத்தில் ஸ்கிரீன் போர்டுகள் வைக்கப்பட உள்ளன. கல்யாண கட்டாக்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சரியாக வேலை செய்கிறார்களா? எனக் கண்காணிக்கப்பட உள்ளனர்.

    கன்னியாகுமரியில் வெங்கடேஸ்வரா கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு, சிமெண்டு சாலை அமைக்கும் பணி, குடிநீர் வசதி, கழிவறைகள் கட்டும் பணி ஆகியவற்றை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும். திருப்பதியைச் சுற்றி உள்ள தேவஸ்தான கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கிட, ‘ஹெட் கவுண்ட்’ கருவி பொருத்தப்பட உள்ளது.

    தேவஸ்தான காலண்டர்கள், டைரிகள் தேவைப்படும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வருகின்றனர். அதற்கான சாப்ட்வேரில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கால் சென்டர்கள் மூலம் பக்தர்கள் குறைகள், புகார்களை தெரிவித்து வருகின்றனர். அதனை அறிக்கையாக தயாரித்து அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேவஸ்தான இணை அதிகாரிகள் கே.எஸ்.சீனிவாசராஜு, போலா.பாஸ்கர், முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, நிதித்துறை அதிகாரி பாலாஜி, என்ஜினீயர் சந்திரசேகர்ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #TirupatiTemple
    Next Story
    ×