search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது
    X

    மது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது

    டெல்லியில் இருந்து பாங்காக் சென்ற விமானத்தை மது போதையில் விமானம் ஓட்டச் சென்ற அரவிந்த் கத்பாலியா விமான போக்குவரத்து இயக்குனர் பதவியில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார். #DelhiBangkokflight #AirIndiacopilot #Kathpalia
    புதுடெல்லி:

    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 9-11-2018 அன்று பிற்பகல் 1.15 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் துணை விமானியாக இருந்த கேப்டன் அரவிந்த் கத்பாலியா என்பவர் மது போதை தொடர்பான பரிசோதனை கருவிக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு விமானத்தில் ஏறிச் சென்றது டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து, பறந்து கொண்டிருந்த விமானத்தை உடனடியாக தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். அரவிந்த் கத்பாலியா மூத்த விமானியாக மட்டுமில்லாமல் ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்கங்கள் (போக்குவரத்து) துறை இயக்குனராகவும் பதவி வகித்து வந்தார்.

    இதற்கு முன்னரும் ஒருமுறை மது போதையுடன் விமானம் ஓட்டச் சென்று இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட அரவிந்த் கத்பாலியாவுக்கு பின்னர் இந்த பதவி அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து முன்னர் எதிர்ப்புகள் கிளம்பின.



    அந்த விமானம் டெல்லிக்கு திரும்பி தரையிறங்கியதும் அரவிந்த் கத்பாலியாவிடம் 'பிரீத் அனலைஸர்’ கருவி மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மது போதையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியது.

    இதன் விளைவாக விமானிகளுக்கான விதி எண் 24-ஐ மீறி நடந்துகொண்ட குற்றத்துக்காக அரவிந்த் கத்பாலியா அடுத்த மூன்றாண்டுகளுக்கு விமானம் ஓட்ட தடை விதித்தும், அவரது விமானி லைசென்சை அதுவரை ரத்து செய்தும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று உத்தரவிட்டது.

    இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்கங்கள் (போக்குவரத்து) துறை இயக்குனர் பதவியில் இருந்தும் இன்று அவர் நீக்கப்பட்டுள்ளார். #DelhiBangkokflight  #AirIndiacopilot #preflightTest #BreathAnalyserTest #Kathpalia #AIDirectorOperations
    Next Story
    ×