search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடிக்கு இணையான செல்வாக்கு, சக்தி யாருக்கும் இல்லை- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    மோடிக்கு இணையான செல்வாக்கு, சக்தி யாருக்கும் இல்லை- தமிழிசை சவுந்தரராஜன்

    மகா கூட்டணி அமைக்க நினைக்கும் யாருக்கும் மோடிக்கு இணையான செல்வாக்கும், சக்தியும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #Modi #MKStalin #Chandrababunaidu
    திருமலை:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாவட்ட தலைவர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு பிரசாதங்களை அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்திலும், அரசியலிலும் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் போது நான் திருமலைக்கு வந்து ஏழுமலையானிடம் ஆசிபெற்றுச் செல்வது வழக்கம். அதன்படி தமிழக பா.ஜ.க.வின் அனைத்து மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களும் ஏழுமலையானை தரிசித்தோம்.

    தமிழக மக்கள் அனைத்து நலங்களும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடிப்படையை பலப்படுத்தி வருகிறோம். வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து பா.ஜ.க. சார்பில் அதிக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி அமையும்.

    தெலுங்கு தேசம் கட்சியானது, காங்கிரசை எதிர்ப்பதற்காகவே தொடங்கப்பட்டது. ஆந்திர மாநிலப் பிரிவினையின் போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார்.

    தற்போது அவர் காங்கிரசுடன் அணி சேர்ந்ததன் மூலம் தனக்கு வாக்களித்த ஆந்திர மக்கள் மட்டுமல்லாமல் தன் தொண்டர்கள் மற்றும் கட்சி முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரையும் ஏமாற்றி விட்டார்.

    புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கி விட்டது போன்ற தோற்றத்தை சந்திரபாபு நாயுடு ஏற்படுத்தி வருகிறார். ஆனால் அது உண்மை இல்லை. ஏற்கனவே எதிரணியில் உள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை அவர் தனித்தனியாக சந்தித்து வருகிறார்.

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்குப் பதிலாக ரூ.70 ஆயிரம் கோடி நிதியுதவியை மத்திய அரசு அளித்துள்ளது. ஆனால் அது ஆந்திர மக்களுக்காக செலவிடப்பட்டதா? என்பது இந்த மாநில மக்களுக்கே தெரியும்.


    எனவே, சந்திரபாபு நாயுடு வேறொரு கூட்டணி அமைப்பதை ஆந்திர மக்களே விரும்பமாட்டார்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தன் மாநிலத்தை உயர்த்த நினைக்காமல், தன்னுடைய சுயநலத்திற்காக அவர் அணிமாறுகிறார். இது எவ்வித அரசியல் தாக்கத்ததையும் ஏற்படுத்தப் போவதில்லை. மோடியைப் பார்த்து சீதாராம் யெச்சூரி, சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் உள்ளிட்டோர் பயப்படுகின்றனர்.

    மத்தியில் பா.ஜ.க. கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்தது. தற்போது 22 மாநிலங்களில் பா.ஜ.க. கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அதனால் இம்முறை பெற்ற எம்.பி.க்களை விட வரும் 2019-ம் ஆண்டில் அதிக எம்.பி.க்களை பா.ஜ.க. பெறும்.

    மோடிக்கு இணையான சக்தி யாருக்கும் இல்லை

    மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் எங்கள் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

    தற்போது மோடியின் முகத்திற்கும், சக்திக்கும் எதிராக மகா கூட்டணி அமைக்க நினைக்கும் யாருக்கும் அவருக்கு இணையான செல்வாக்கும் இல்லை, சக்தியும் இல்லை. மோடியின் பலத்திற்கு முன் அவருக்கு எதிராக மாபெரும் கூட்டணி உருவாக வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #Modi #MKStalin #Chandrababunaidu
    Next Story
    ×