search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி நில விவகாரம்- அப்பீல் மனுக்களை முன்கூட்டியே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
    X

    அயோத்தி நில விவகாரம்- அப்பீல் மனுக்களை முன்கூட்டியே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    அயோத்தி நில விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. #AyodhyaTitleDispute #RamJanmaBhoomiCase #HinduMahasabha
    புதுடெல்லி:

    அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 2010ல் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ராம ஜன்ம பூமி இயக்கத்துக்கும் (சங் பரிவார் அமைப்பு), ஒரு பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும், மீதமுள்ள பகுதி நிர்மோஹி அகோரா என்ற இந்து அமைப்பிற்கும் வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமையாமல், மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த தீர்ப்பை எதிர்த்து மூன்று தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். பல்வேறு பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்து மகாசபையின் மேல் முறையீட்டு மனுவை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், மே 2011-ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

    அதன்பின்னர் மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு சமீபத்தில் பரிசீலனை செய்தது. அப்போது, இம்மனுக்களை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வு எது? என்று தீர்மானித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து விசாரணை தொடங்கும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று இந்து மகாசபை சார்பில் வழக்கறிஞர் பருன் குமார் சின்ஹா உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி அயோத்தி நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நிராகரித்தது.

    ‘இந்த வழக்கில் நாங்கள் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளோம். மேல்முறையீட்டு வழக்குகள் ஜனவரியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என நீதிபதிகள் கூறினர். #AyodhyaTitleDispute #RamJanmaBhoomiCase #HinduMahasabha
    Next Story
    ×