search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் முன்பதிவு, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் - சபரிமலையில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு
    X

    பெண்கள் முன்பதிவு, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் - சபரிமலையில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு

    சபரிமலையில் தரிசனத்திற்கு பெண்கள் முன்புதிவு, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் போன்ற காரணமாக முதல்முறையாக 15 ஆயிரத்து 59 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். #Sabarimala #SabarimalaTemple
    திருவனந்தபுரம்

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஐப்பசி மாத பூஜை மற்றும் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை ஆட்ட திருநாள் பிறந்த நாள் போன்ற காலங்களில் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டபோது, அங்கு சாமி தரிசனத்திற்கு சென்ற இளம்பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து போராட்டம் நடத்தினார்கள்.

    இதனால் இதுவரை சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் யாரும் தரிசனம் செய்ய முடியாத நிலையே உள்ளது.

    இந்த நிலையில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை திறக்கப்பட உள்ளது.



    மண்டல பூஜையின் போது சபரிமலையில் கேரளா மட்டுமின்றி தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள்.

    பக்தர்கள் வசதிக்காக ஆன்லைன் மூலம் சாமி தரிசனத்திற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3½ லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 550 பேர் இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜையின் போதும் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    ஏற்கனவே சபரிமலை கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் உள்ளது. மண்டல பூஜையின் போதும் பக்தர்கள் போர்வையில் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையில் ஐப்பசி மாத பூஜை மற்றும் சித்திரை ஆட்ட திருநாள் பிறந்தநாள் காலங்களில் சபரிமலை கோவில் நடை திறந்தபோது, அங்கு நடந்த போராட்டங்கள் பற்றி சபரிமலை சிறப்பு ஆணையரும், மாவட்ட நீதிபதியுமான மனோஜ், கேரள ஐகோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

    சபரிமலையில் தற்போது சூழ்நிலை மோசமாகவும், அபாயகரமாகவும் உள்ளது. சபரிமலைக்கு சாமி தரிசனத்திற்கு வந்த பெண்களை தடுத்தது தவறு. 18-ம்படியில் பக்தர்கள் ஏறியதிலும் ஆச்சாரங்கள் மீறப்பட்டுள்ளது. மண்டல பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இதே நிலை தொடர்ந்தால் பக்தர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

    போராட்டம் நடத்தும் பக்தர்கள் கூட்டத்தோடு சமூக விரோத சக்திகளும் ஊடுருவி அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே சபரிமலையில் நடைபெறும் போராட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுபோன்ற சூழ்நிலைகளால் மண்டல பூஜையை யொட்டி சபரிமலையில் முதல் முறையாக 15 ஆயிரத்து 59 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வருகிற 14-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந்தேதி வரை இந்த போலீஸ் பாதுகாப்பு சபரிமலையில் போடப்படும்.

    சன்னிதானத்தில் மட்டும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பம்பை, நிலக்கல்லிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனங்கள் இங்கு நிறுத்தப்படும்.

    சபரிமலை பாதுகாப்பு பணியில் 55 போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 113 டி.எஸ்.பி.க்கள், 1,450 சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 12 ஆயிரத்து 162 போலீஸ்காரர்கள், 60 பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 860 பெண் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பம்பை, நிலக்கல், மரக்கூட்டம், சன்னிதானம் என்று 4 மண்டலங்களாக பிரித்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பம்பையில் மட்டும் 600 ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    கோட்டயம், பத்தனம் திட்டா, இடுக்கி, ஆலப்புழா, கொல்லம் போன்ற மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Sabarimala #SabarimalaTemple

    Next Story
    ×