search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு - சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்
    X

    போலீஸ் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு - சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்

    போலீஸ் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimala #SabarimalaSannidhanam

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது.

    இந்த உத்தரவு சபரிமலை ஐயப்பன் கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து கேரளா முழுவதும் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு கடந்த மாதம் 17-ந்தேதி ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது.அப்போது கோவிலுக்கு 15 இளம்பெண்கள் செல்ல முயன்றனர்.

    ஐயப்ப பக்தர்கள் அந்த இளம் பெண்களை தடுத்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் கடந்த மாதம் ஐயப்பன் கோவில் நடை திறந்திருந்த 5 நாட்களும் சபரிமலையில் பதட்டம் நிலவியது.

    சபரிமலையில் போராட்டம் நடத்தியதாக 543 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 3701 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் சித்திரை திருநாள் மன்னரின் பிறந்த நாளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப் பட இருக்கிறது. அப்போது மீண்டும் கோவிலுக்கு பெண்கள் வரலாம் என ஐய்யப்ப பக்தர்கள் கருதினர்.

    சபரிமலைக்கு பெண்கள் யாரும் வர வேண்டாம் என்று ஐயப்ப பக்தர்கள் அமைப்பு மற்றும் போராட்டக்குழுவினர் சார்பில் வேண்டுகோள் விடுத்தனர்.

    மேலும் சபரிமலைக்கு செய்தி சேகரிக்க பெண் நிருபர்களை அனுப்ப வேண்டாம் என்றும் செய்தி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை மீறி கோவிலுக்கு வரும் பெண்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் போராட்டக்குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து சபரிமலையில் நேற்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. வழக்கத்தை காட்டிலும் சபரிமலையில் 20 கமாண்டோ படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

     


     

    நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 2300 போலீசார் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். நிலக்கல், எரிமேலி, இளவங்கல், சன்னிதானம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    சபரிமலைக்கு வழக்கமாக வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு வரிசையில் அனுப்பபடுவார்கள். ஆனால் இன்று பக்தர்கள் நிலக்கல்லிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். பகல் 12.30 மணிக்கு மேல் தான் அவர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினர்.

    இது போல வாகனங்கள் எதுவும் நிலக்கல்லை தாண்டி செல்ல அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. கார், வேன், ஜீப்களில் வந்த பக்தர்கள் அனைவரும் நிலக்கல்லில் இறக்கி விடப்பட்டு அரசு பஸ்சில் பம்பைக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டனர்.

    பத்திரிகையாளர்களை அனுமதிக்க மறுத்தது, பக்தர்களை நிலக்கல்லிலேயே இறக்கி விட்டது, பம்பைக்குச் செல்ல போதுமான அரசு பஸ்களை ஏற்பாடு செய்யாதது இன்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    நிலக்கல், எரிமேலி பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதனால் இன்று ஐயப்பன் கோவில் நடை திறக்கும் முன்பே சபரி மலையில் பதட்டம் நிலவியது. இதைத் தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்களை சமாதானப்படுத்தி பம்பைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆண் பத்திரிகையாளர்களும் சபரிமலை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    சபரிமலை சன்னிதானம் பகுதியில் இதுவரை பெண் போலீசார் பணிக்கு நியமிக்கப்பட்டதில்லை. வழக்கமாக அவர்கள் பம்பை வரை மட்டுமே பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள். ஆனால் இன்று முதல் முறையாக பெண் போலீசார் சபரிமலை நடை பந்தல் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    50 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் 30 பேர் இந்த பணிக்கு வந்துள்ளனர். அவர்கள் இன்று காலை முதல் நடை பந்தல் வரை பணி அமர்த்தப்பட்டனர். நடை திறக்கும் போது இவர்கள் சன்னிதானம் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது சபரிமலை கோவில் வரலாற்றில் முதல் முறையாக நடக்கிறது என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்த னர்.

    சபரிமலை பாதுகாப்பு பணி மற்றும் கோவில் நடை திறப்பு குறித்து பத்தனம் திட்டா மாவட்ட கலெக்டர் நூக் கூறியதாவது:-

    சபரிமலை கோவிலுக்கு செல்ல பாதுகாப்பு தர வேண்டும் என்று பெண்கள் யாரும் இம்முறை மனு கொடுக்கவில்லை. இனிமேல் யாராவது இளம் பெண்கள் கோவிலுக்குச் செல்ல பாதுகாப்பு கேட்டால், அவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்கும்.

    சபரிமலை கோவிலுக்கு செல்ல உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி கேரள ஐகோர்ட்டில் 5 பெண் வக்கீல்கள் மனு செய்திருந்தனர். அவர்கள் இன்று கோவிலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து உறுதியான தகவல் எதுவும் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பத்தனம்திட்டா போலீஸ் சூப்பிரண்டு நாராயணன் கூறுகையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பெண்கள் யாராவது கோரிக்கை வைத்தால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை போலீசார் நடைமுறைப் படுத்துவார்கள்.

    அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அவ்வாறு சபரிமலை வரும் பெண்களை யாராவது தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். #Sabarimala #SabarimalaSannidhanam

    Next Story
    ×