search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொது இடங்களில் குப்பை வீசினால் ரூ.500 அபராதம்: பரமேஸ்வரா எச்சரிக்கை
    X

    பொது இடங்களில் குப்பை வீசினால் ரூ.500 அபராதம்: பரமேஸ்வரா எச்சரிக்கை

    பெங்களூருவில் பொது இடங்களில் குப்பை வீசினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா எச்சரிக்கை விடுத்துள்ளார். #Parameshwara
    பெங்களூரு :

    பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதில் மேயர் கங்காம்பிகே, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நகரில் சிலர் கண்ட இடங்களில் குப்பைகளை வீசுகிறார்கள். இதனால் குப்பை குவிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு, பொது இடங்களில் குப்பைகளை வீசினால், அபராதமாக ரூ.500 விதிக்க மாநகராட்சி அனுமதி கேட்டுள்ளது. இதற்கு மாநில அரசு விரைவில் அனுமதி வழங்கும். பொது இடங்களில் குப்பை வீசினால் ரூ.500 அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்களை பிடிக்க ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரரை நியமிக்க முடிவு செய்துள்ளோம். குப்பைகளை அகற்றும்படி மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். குப்பைகளை அகற்றும் பணி தற்போது நல்ல முறையில் நடந்து வருகிறது. தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

    பெங்களூருவில் 1.30 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 29 லட்சம் வீடுகளும், 5 லட்சம் வணிக நிறுவன கட்டிடங்களும் உள்ளன. நகரில் தினமும் மொத்தம் 5,700 டன் குப்பைகள் சேருகின்றன. இதில் வீடுகளில் இருந்து 4,200 டன் குப்பைகள் சேகரமாகிறது. குப்பைகளை அகற்ற 4,213 ஆட்டோ டிப்பர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றன. 566 குப்பை சேகரிக்கும் லாரிகள், 8 தானியங்கி தூய்மை எந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன.

    நகரில் 18 ஆயிரத்து 500 துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 11 இடங்களில் உயிரி எரிவாயு தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குப்பையை சேகரிக்கும் லாரிகளுக்கு ஜி.பி..எஸ். கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆட்டோக்களுக்கு அத்தகைய தொழில்நுட்பத்தை பொருத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    புதிய குப்பை லாரிகள் மற்றும் ஆட்டோக்களை வாங்கும்போது, அவற்றை பராமரிக்கும் பொறுப்பை ஒப்பந்ததாரர்களே நிர்வகிக்கும் அம்சம் சேர்க்கப்படும். புதிதாக தூய்மைபடுத்தும் எந்திரங்களை வாங்க டெண்டர் விடப்படும். இப்போது பெல்லஹள்ளியில் உள்ள குப்பை கிடங்கு மூடப்படும். அதற்கு பதிலாக தொட்டபள்ளாபுராவில் குப்பை கிடங்கு நவீனபடுத்தப்படும்.

    குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 6 மாதத்திற்குள் அமல்படுத்தப்படும். பிடதியில் அமைக்கப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையம் இன்னும் சில நாட்களில் திறக்கப்படும். குப்பையை பிரச்சினையை கவனிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு செயற்பொறியாளர் நியமிக்கப்படுவார்.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #Parameshwara
    Next Story
    ×