search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமர் கோவில் கட்டாவிட்டால் பாஜகவுக்கு வரும் தேர்தலில் 2 இடங்கள்தான் கிடைக்கும்- உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
    X

    ராமர் கோவில் கட்டாவிட்டால் பாஜகவுக்கு வரும் தேர்தலில் 2 இடங்கள்தான் கிடைக்கும்- உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

    ராமர் கோவில் வாக்குறுதி பொய்யானால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 2 இடங்கள் தான் கிடைக்கும் என சிவசேனா தலைவர் எச்சரித்துள்ளார். #ShivSena #UddhavThackeray #RamTemple
    மும்பை:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலை விரைவாக கட்டி முடிக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும் அல்லது அவசரச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் இதே கோரிக்கையையே முன்வைக்கிறது.

    இந்நிலையில் ராய்காட் மாவட்டம் மகத் பகுதியில் நடைபெற்ற சிவசேனா பொதுக்கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சேகரிக்கப்பட்ட செங்கற்கள் எல்லாம் உண்மையில் அதற்காக அல்ல. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்காகத் தான். ராமர் கோவில் கட்டுவதாக தேர்தலில் அளித்த அந்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 280 இடங்களில் வென்ற பா.ஜனதாவுக்கு அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெறும் 2 இடங்கள் தான் கிடைக்கும். 2019-ம் ஆண்டு தேர்தலுக்கான போர் இப்போதே தொடங்கிவிட்டது. 

    நாடாளுமன்ற தேர்தல் வேகமாக வந்துவிடும். அரசியல் சூழல் நாட்டில் சரிவை நோக்கி செல்கிறது. என்னுடைய கவலையெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி அல்ல, மக்களுக்கும், இந்த நாட்டுக்கும் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்துத் தான். 2014-ம் ஆண்டு பா.ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் பணவீக்கம் குறையவும் இல்லை, வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் இல்லை. தொண்டர்கள் அனைவரும் மக்களிடம் சென்று, நரேந்திர மோடி அரசிடம் இருந்து ஏதாவது நல்ல திட்டங்களைப் பெற்றிருக்கிறீர்களா என்று கேட்க வேண்டும். 

    மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்க்க நான் செல்கிறேன். ஆனால் பிரதமர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் பிசியாக இருக்கிறார். மகாராஷ்டிராவில் அடுத்த முதல்-மந்திரி சிவசேனா கட்சியில் இருந்து வர வேண்டும். இதை நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உறுதி செய்வேன். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக மாநில அரசு அறிவித்து உள்ளது. ஆனால் எப்போது மக்களுக்கு நிவாரணத் தொகையை அளிக்கப்போகிறது என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.  #ShivSena #UddhavThackeray #RamTemple
    Next Story
    ×