search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார் - எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை நவ.14-க்கு ஒத்திவைப்பு
    X

    பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார் - எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை நவ.14-க்கு ஒத்திவைப்பு

    பெண் பத்திரிகையாளர் பாலியல் புகாரின் அடிப்படையில் மத்திய முன்னாள் மந்திரி எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையை டெல்லி நீதிமன்றம் நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #MJAkbar #journalistPriyaRamani
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
     
    அவ்வகையில், மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளானார். பிரபல பத்திரிகையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி  பொறுப்பில் இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் தனது மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.

    இதைதொடர்ந்து, அக்பரின் சட்ட ஆலோசனை நிறுவனமான கரன்ஜாவாலா குழுமத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டெல்லி கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.



    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது எம்.ஜே.அக்பர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மாஜிஸ்திரேட் சமர் விஷாலிடம் தனது வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார். தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரியா ரமணி சமூக வலைத்தளங்களின் மூலம் அவதூறான குற்றச்சாட்டுகளை பரவ விட்டதாக அவர் தெரிவித்தார்.

    எம்.ஜே.அக்பரின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட மாஜிஸ்திரேட் இவ்வழக்கின் மறுவிசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என தெரிகிறது. #metoo #MJAkbar #MJAkbardefamationsuit #journalistPriyaRamani 
    Next Story
    ×