search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் விமான விலை விபரத்தை 10 நாட்களில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
    X

    ரபேல் விமான விலை விபரத்தை 10 நாட்களில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

    ரபேல் விமான விலை விபரத்தை 10 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #RafaleDeal #SupremeCourt

    புதுடெல்லி:

    பிரான்சு நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது முடிவு செய்யப்பட்டது.

    அப்போது 126 ரபேல் போர் விமானங்கள் ரூ. 79,200 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் சர்ச்சை எழுந்ததால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி மீண்டும் ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தார். ஆனால் 36 ரபேல் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்க அந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தினமும் வலியுறுத்தி கூறி வருகிறார்.

    குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியின்போது போடப்பட்ட ஒப்பந்தப்படி பார்த்தால் 36 விமானங்களை ரூ.22,600 கோடிக்குதான் வாங்க வேண்டும். ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்து இருக்கிறது என்று ராகுல் கூறி வருகிறார். மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் அனில்அம்பானி லாபம் அடைந்து இருப்பதாகவும் ராகுல் குற்றம் சாட்டுகிறார்.

    இந்த நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த்சின்கா, அருண்ஷோரி மற்றும் பிரசாத் பூ‌ஷண் ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

    இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நடந்தது. அப்போது வக்கீல் வாதத்திற்கு பிறகு நீதிபதிகள் கூறியதாவது:-


    ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட விவரங்களை பொது இணையதளத்தில் மத்திய அரசு வெளியிட வேண்டும். ஒவ்வொரு விமானம் எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

    சீல் வைக்கப்பட்ட கவரில் அந்த தகவல்களை வைத்து 10 நாட்களுக்குள் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். போர் விமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான் இந்த உத்தரவை நாங்கள் வெளியிடுகிறோம்.

    ஒருவேளை ரபேல் போர் விமான ஒப்பந்த தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாது என்று மத்திய அரசு கருதினால் அது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யலாம்.

    ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் எத்தகைய அடிப்படையில் செய்யப்பட்டது என்பது தெரிவிக்கப்பட வேண்டும். எங்கள் திருப்திக்காகவே தகவல்களை நாங்கள் கேட்கிறோம்.

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக சொல்பவர்கள் அந்த விமானம் இந்திய விமான படைக்கு தேவையா? இல்லையா? என்பதை ஏன் கேட்கவில்லை.

    இந்த வழக்கு விசாரணை 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    அப்போது பிரசாந்த் பூ‌ஷண் தரப்பில், “ரபேல் வழக்கு விசாரணை சி.பி.ஐ. மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும்” என்று கூறப்பட்டது. அதை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

    இப்போதைக்கு இந்த வழக்கு விசாரணை போதும். சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றனர். #RafaleDeal #SupremeCourt

    Next Story
    ×