search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் விசாரணை முறையாக நடந்தால் மோடி ஜெயிலுக்கு செல்வார் - ராகுல் காந்தி சொல்கிறார்
    X

    ரபேல் விசாரணை முறையாக நடந்தால் மோடி ஜெயிலுக்கு செல்வார் - ராகுல் காந்தி சொல்கிறார்

    ரபேல் முறைகேடு தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றால் பிரதமர் நரேந்திரமோடி ஜெயிலுக்கு செல்வார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். #RafaleDeal #RahulGandhi #PMModi

    இந்தூர்:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதை பா.ஜனதா அரசு மறுத்து வந்தது.

    இந்த நிலையில் ரபேல் முறைகேடு தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றால் பிரதமர் நரேந்திரமோடி ஜெயிலுக்கு செல்வார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார். இது தொடர்பாக ராகுல்காந்தி கூறியதாவது:-

    பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக முறையாக விசாரணை நடைபெற்றால் பிரதமர் மோடி ஜெயிலுக்கு செல்வார்.

    மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்ததில் இருந்து இதுவரை ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றப்படவில்லை. ஊழலை ஒழிப்போம் என்றார்கள். ஒழிக்கவில்லை. நல்லநாள் பிறக்கும் என்றார்கள். இதுவரை பிறக்கவில்லை.

    தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின்படி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வில்லை. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை பெற்று தரவில்லை. மொத்தத்தில் அவர்களால் எந்தவிதமான நன்மையும் நாட்டு மக்களுக்கு கிடைக்க போவதில்லை.

     


    மக்கள் இனி வாக்காளிக்க மாட்டார்கள் என தெரிந்து தான் தற்போது ராமர்கோவில் பிரச்சினையை மீண்டும் அவர்கள் கையில் எடுத்து உள்ளனர். ஆனால் இந்த முயற்சி ஒரு போதும் அவர்களுக்கு கை கொடுக்காது.

    நான் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்லும் போது பா.ஜனதாவினர் அதை விமர்சிக்கிறார்கள். நாட்டில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தனி சொத்தா? அங்கு செல்ல அமித்ஷா, மோடி மட்டும் தான் உரிமம் பெற்றுள்ளனரா? மற்ற எவரும் செல்லக்கூடாதா?

    எனக்கு தோன்றினால் எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும் செல்வேன். கடவுளை வழிபடுவேன். அதேபோன்று தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும், குருத் வாராக்களுக்கும் செல்வேன்.

    குறிப்பிட்ட மதத்தை மட்டும் அடையாளமாக்கி கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏனெனில் நான் தேசிய தலைவர். மாறாக இந்துத்துவா தலைவர் அல்ல.

    இந்துயிசம் அன்பையும், நெறியையும் போதிக்கிறது. அதை எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. அது அனைவருக்கும் உரித்தானது.

    அதேவேளையில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உரிமை கொண்டாடும் இந்துத்துவம் வெறுப்புணர்வையும், வேறுபாடுகளையும் தான் ஏற்படுத்துகிறது. அதனால் நாட்டில் பிரிவினை தான் உருவாகுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RafaleDeal #RahulGandhi #PMModi

    Next Story
    ×