search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் ஒப்பந்த அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
    X

    ரபேல் ஒப்பந்த அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்காக அரசு எடுத்த அனைத்து கொள்கை முடிவுகளையும் மூடி முத்திரை போட்ட உறையில் வைத்து மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. #SupremeCourt #RafaleDeal
    புதுடெல்லி:

    மத்திய அரசு ராணுவத்துக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது.

    இதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதற்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்தார். மேலும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றும் மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 10-ந்தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது, இதை பொதுநல மனுக்கள் வாயிலாக விசாரிக்க முடியாது என்றும், தேர்தல் ஆதாயத்துக்காக இவை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதாடினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு எதையும் உறுதி செய்யவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவுகளை அறிந்துகொள்ள விரும்புகிறோம். எனவே வருகிற 29-ந்தேதிக்குள் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

    இது சுப்ரீம் கோர்ட்டின் புரிதலுக்காக மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ள விளக்கமே தவிர மத்திய அரசுக்கு அனுப்பப்படும் நோட்டீஸ் அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்காக அரசு எடுத்த அனைத்து கொள்கை முடிவுகளையும் மூடி முத்திரை போட்ட உறையில் வைத்து மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. #SupremeCourt #RafaleDeal
    Next Story
    ×