search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் மாநில மந்திரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்: பினராயி விஜயன் அழைப்பு
    X

    தென் மாநில மந்திரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்: பினராயி விஜயன் அழைப்பு

    சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு தென் மாநில தேவசம் மந்திரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்து உள்ளார். #Sabarimala #PinarayiVijayan
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17 முதல் 22-ந்தேதி வரை கோவிலின் நடை திறக்கப்பட்டது.

    இந்த நாட்களில் சபரிமலை அய்யப்பனை தரிசிப்பதற்கு தடை செய்யப்பட்ட வயதை சேர்ந்த பல பெண்கள் முயன்றனர். ஆனால் சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மொத்தம் 12 பெண்கள் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர்.

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசு, அங்கு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இந்த போராட்டங்கள் தொடர்பாக 450 வழக்குகள் பதிவு செய்துள்ள கேரள காவல்துறை, இது தொடர்பாக 1400-க்கும் மேற்பட்டோரை கைது செய்திருக்கிறது.

    இந்த கைது நடவடிக்கைகளை கண்டித்து மாநில பா.ஜனதா போராட்டங்களில் இறங்கி இருக்கிறது. நேற்று காலையிலும் பத்தனம்திட்டா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நோக்கி பா.ஜனதா தொண்டர்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளுக்காக கேரளா மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்ல உள்ளனர்.

    எனவே அங்கு செய்ய வேண்டிய பணிகள், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தென் மாநிலங்களை சேர்ந்த தேவசம் மந்திரிகளுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்து உள்ளார்.

    சாமி தரிசனத்துக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பின்பற்றப்படும் ஆன்-லைன் முன்பதிவு முறையை சபரிமலையிலும் செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. இது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.

    எனினும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு குறித்து இந்த கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படாது என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கிடையே மண்டல பூஜைக்காக தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தும் தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்களில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என தேவசம்போர்டுக்கு மாநில அரசு அறிவுறுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜனதாவினர், மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிராக அமைதியான முறையிலும், சட்ட ரீதியாகவும் போராடப்போவதாக அறிவித்து உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மூலம் உலகப்புகழ் பெற்ற சபரிமலையை மாநில அரசு போர்க்களமாக மாற்ற முயல்வதாக பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார். #Sabarimala #PinarayiVijayan 
    Next Story
    ×