search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சிகளுக்கான நன்கொடை வரம்பை ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் - தேர்தல் கமிஷன் வலியுறுத்தல்
    X

    கட்சிகளுக்கான நன்கொடை வரம்பை ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் - தேர்தல் கமிஷன் வலியுறுத்தல்

    பெயர் சொல்லாமல் நன்கொடையாளர்கள் கட்சிகளுக்கு வழங்குகிற நன்கொடை வரம்பை ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது. #DonationLimit #ElectionCommission #CentralGovernment
    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகளுக்கு தனி நபர்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்குவது உண்டு. பல அரசியல் கட்சிகளுக்கு இந்த நன்கொடைதான் தேர்தல் நிதியாக பயன்படுகிறது.

    நமது நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு தனிப்பட்ட நபர்களும், நிறுவனங்களும் தங்கள் பெயரைக் கூறாமல் நன்கொடை வழங்குவதும் உண்டு.



    இப்படி பெயர் கூறாமல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரக்கூடாது என அரசியல் சட்டம் கூறவில்லை. பிற சட்டங்களும்கூட இத்தகைய நன்கொடையை தடை செய்யவில்லை.

    இருப்பினும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு ‘29-சி’ ஒரு கடிவாளம் போட்டுள்ளது. அதன்படி, ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக இத்தகைய நன்கொடையை பெறுகிறபோது கட்சிகளின் பொருளாளர் இது குறித்து ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அறிக்கை அளிக்க வேண்டும்.

    இந்த நிலையில், மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு ஒரு கடிதம் எழுதியது. அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு ‘29-சி’யில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

    மேலும் அதில், அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக அளிக்கிற நன்கொடைக்கு ரூ.2 ஆயிரம் என்ற உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும்; பெயர் கூறாமல் வழங்குகிற நன்கொடைக்கும் ரூ.2 ஆயிரம் என்ற அளவில் உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

    இதில் அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக அளிக்கிற நன்கொடைக்கு ரூ.2 ஆயிரம் என்ற உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதை நிதி சட்டத்திலும் சேர்த்து விட்டது.

    ஆனால் பெயர் கூறாமல் வழங்குகிற நன்கொடைக்கும் ரூ.2 ஆயிரம் என்ற அளவில் உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாமல் இன்னும் நிலுவையில்தான் உள்ளது.

    இதை சுட்டிக்காட்டியும், பெயர் கூறாமல் வருகிற நன்கொடைக்கு ரூ.2 ஆயிரம் என உச்சவரம்பினை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் மீண்டும் ஒரு கடிதம் எழுதி உள்ளது.  #DonationLimit #ElectionCommission #CentralGovernment 
    Next Story
    ×