search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என் வாழ்வில் நிரவ் மோடியை பார்த்ததே இல்லை - மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விளக்கம்
    X

    என் வாழ்வில் நிரவ் மோடியை பார்த்ததே இல்லை - மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விளக்கம்

    என் வாழ்வில் நான் நிரவ் மோடியை பார்த்ததே இல்லை. அவரை நான் சந்தித்ததாக ராகுல் காந்தி கூறி இருப்பது கற்பனை என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறி உள்ளார். #ArunJaitley #NiravModi #RahulGandhi
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பி விட்ட மும்பை வைர வியாபாரி நிரவ் மோடியை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சந்தித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

    மேலும் பொதுத்துறை வங்கிகளிடம் பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பி விட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவையும் அருண் ஜெட்லி, நாடாளுமன்றத்தில் சந்தித்ததாகவும் அவர் புகார் கூறி உள்ளார்.

    இவற்றுக்கு அருண் ஜெட்லி விளக்கம் அளித்து, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-



    மத்திய பிரதேசத்தில் 2 வெவ்வேறு நிகழ்ச்சிகளில் திங்கட்கிழமை (நேற்று முன்தினம்) பேசிய ராகுல் காந்தி என்னைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

    முதல் பேச்சில் விஜய் மல்லையாவை நான் நாடாளுமன்றத்தில் சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளேன் என்று கூறி இருக்கிறார். மேலும், அவர் லண்டனுக்கு தப்பி விடப்போகிறேன் என என்னிடம் கூறியதாகவும், நான் அவருக்கு அதற்கு உதவினேன் என்று ஒப்புக்கொண்டுள்ளேன் என்றும் கூறி இருக்கிறார்.

    இரண்டாவது பேச்சில், நிரவ் மோடியையும் நான் நாடாளுமன்றத்தில் சந்தித்தை ஒப்புக்கொண்டுள்ளேன் என்று கூறி இருக்கிறார். அவர் (நிரவ் மோடி) என்னை சந்தித்து, தான் நாட்டை விட்டு தப்பிச்செல்வதாக கூறியதாகவும், நான் அதற்கு உதவியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.

    இதில் உண்மை என்னவென்றால், என் வாழ்வில் நிரவ் மோடியை நான் பார்த்ததாகவே நினைவில் இல்லை. அப்படி இருக்கையில், நாடாளுமன்றத்தில் நான் அவரை சந்தித்தேனா என்ற கேள்விக்கே இடம் இல்லை.

    ராகுல்காந்தி கூறியபடி அவர் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தால், அதை அங்குள்ள வரவேற்பு ஆவணங்கள் காட்டுமே.

    பின் நான் எங்கே ஒப்புக்கொண்டேன், ராகுல் காந்தி அவர்களே?

    நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் விஜய் மல்லையா ஒரு முறை நாடாளுமன்ற தாழ்வாரத்தில் என்னை துரத்தி வந்து பேசினார். நான் அவர் பேசியதை காது கொடுத்து கேட்கவில்லை.

    உங்கள் திட்டத்தை நீங்கள் வங்கிகளிடம் போய் பேசுங்கள் என்று கூறி விட்டேன்.

    இதைத்தான் அவர் நான் மல்லையாவை சந்தித்ததாகவும், அவர் லண்டனுக்கு தப்பப்போவதாக கூறியதாகவும், நான் உதவியதாகவும் கூறி உள்ளார்.

    இது முழுக்க முழுக்க பொய். இப்படிப்பட்ட பொய்யை அவர் எப்படி கற்பனை செய்கிறார்?

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.  #ArunJaitley #NiravModi #RahulGandhi
    Next Story
    ×