search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு
    X

    நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த பின்னர் சபரிமலை கோவில் நடை, நாளை முதல் முறையாக திறக்கப்படுவதால் கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை அமல்படுத்த போவதாக கேரள மாநில அரசு அறிவித்தது. இதற்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், நாயர் சங்கம், ஐயப்ப சேவா சங்கம் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டக்களத்தில் குதித்தன. இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது.



    பா.ஜனதா கட்சி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 90 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட பேரணியை நடத்தியது.

    சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பேரணியில் குவிந்ததால் திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்தது. பேரணியில் பேசிய பா.ஜனதா மாநில செயலாளர் ஸ்ரீதரன்பிள்ளை தங்களது முதல்கட்ட போராட்டம் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், 24 மணி நேரத்திற்குள் மாநில அரசு சரியான முடிவை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக இதை விட பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    சர்வதேச இந்து பரி‌ஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசும் போது, நாளையும், நாளை மறுநாளும் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் இந்து அமைப்புகள் ஆதரவுடன் நடத்தப்படும் என்றார்.

    இந்த பிரச்சினைக்கு சமரச தீர்வு காண மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் இன்று சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம்போர்டு தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சபரிமலை கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜ குடும்பம், தந்தரிகள் சமாஜம், ஐயப்ப சேவா சங்கம், ஐயப்ப சேவா சமாஜம், யோக சேமசபா ஆகியோருக்கு தேவசம் போர்டு அழைப்பு விடுத்து இருந்தது. இதன் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசும், தேவசம் போர்டும் உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அது தொடர்பான தீர்ப்பு வரும்வரை சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும். தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வற்புறுத்தினார்கள்.

    இதுதொடர்பாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில் சபரிமலை கோவிலின் பாரம்பரியம், நம்பிக்கைகளை பாதுகாக்கவே விரும்புவதாகவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் என்றார்.

    இதனால் இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தெரிகிறது. இந்த கூட்ட முடிவுக்கு பிறகே சபரிமலையில் விவகாரத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி ஏற்படுமா, அல்லது தொடருமா? என்பது தெரியவரும்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை (17-ந்தேதி) மாலை திறக்கப்படுகிறது. வருகிற 22-ந்தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல தடை இல்லை என்பதால் நாளை முதலே சபரிமலை கோவிலுக்கு பெண் பக்தர்கள் வருகை தர வாய்ப்பு உள்ளது.

    கேரளாவை சேர்ந்த பல பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல விரதம் இருந்து வருகிறார்கள். கண்ணூர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்பவர் 41 நாள் விரதம் இருந்து வருகிறார்.

    அவர் தன்னுடன் சில பெண்களை அழைத்துக் கொண்டு சபரிமலைக்கு செல்லப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும், போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ஏற்கனவே சபரிமலைக்கு பெண் பக்தர்கள் சென்றால் அவர்களை பம்பை, நிலக்கல், பந்தளம் பகுதிகளில் தடுத்து நிறுத்துவோம் என்று இந்து அமைப்புகள் எச்சரித்து உள்ளன. சிவசேனா இது தொடர்பாக தற்கொலை மிரட்டலும் விடுத்துள்ளது. நிலக்கல், பம்பை பகுதிகளில் ஆதிவாசி சங்கடன சமிதி சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    சபரிமலைக்கு வரும் பெண்களை சாலைகளில் படுத்து தடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாகவும் ஐயப்ப பக்தர்கள் அறிவித்து உள்ளனர். இதனால் சபரிமலை பகுதியில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    வழக்கமாக சபரிமலை கோவில் நடைதிறப்பின் போது ஒரு ஐ.ஜி. தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது உருவாகி உள்ள பதட்டத்தை தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், கமாண்டோ போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல சபரிமலை செல்லும் வழிகளான பந்தளம், நிலக்கல், பம்பை பகுதியிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    பெண் பக்தர்கள் பாதுகாப்புக்காக சபரிமலையில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று முதலில் கூறப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா மாநில அரசுக்கு பரிந்துரையும் செய்திருந்தார்.

    தற்போது போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளதால் சபரிமலை பாதுகாப்பு பணி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை. பெண் போலீசாரை அங்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்போவதில்லை என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. #SabarimalaTemple

    Next Story
    ×