search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமருக்கு எதிரான போருக்கு உ.பி. அரசு தயாராகி வருகிறது - பிரவின் தொகாடியா நேரடி குற்றச்சாட்டு
    X

    ராமருக்கு எதிரான போருக்கு உ.பி. அரசு தயாராகி வருகிறது - பிரவின் தொகாடியா நேரடி குற்றச்சாட்டு

    அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்த மஹ்ந்த் கைது செய்யப்பட்ட நிலையில், ராமருக்கு எதிரான போருக்கு உ.பி. அரசு தயாராகி வருகிறது என பிரவின் தொகாடியா கூறியுள்ளார். #PravinTogadia
    லக்னோ:

    விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச செயல் தலைவர் பிரவின் தொகாடியா. இந்துத்துவா கொள்கையில் தீவிர பற்று கொண்டவரான இவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அந்தர்ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் என்னும் புதிய அமைப்பை தொடங்கி அந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று வருகிறார்.

    அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நகரில் இருந்து அக்டோபர் மாதம் 21-ம் தேதி முதல் அயோத்தி நோக்கி நடைபயணம் செல்வோம் என பிரவின் தொகாடியா சமீபத்தில் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ராமஜென்ம பூமி நியாஸ் அமைப்பின் தலைவர் மஹந்த் பரம்ஹன்ஸ் தாஸ், இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரை வலுக்கட்டாயமாக உண்ணாவிர பந்தலில் இருந்து வெளியேற்றிய போலீசார் பின் கைது செய்தனர்.


    கைது செய்யப்பட்ட மஹந்த்

    இந்த நடவடிக்கைக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச செயல் தலைவர் பிரவின் தொகாடியா இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அயோத்தி நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தொகாடியா, உத்தரப்பிரதேச மாநில அரசு ராமருக்கு எதிரான போருக்கு தயாராகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

    அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என அமைதியான முறையில் போராடுவதும் குற்றமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மஹந்த் பரம்ஹன்ஸ் தாஸை கைது செய்ததன் மூலம் மொகலாய மன்னர் பாபரின் ஆட்சிக்காலம் போல உத்தரப்பிரதேச மாநில அரசு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதாக தொகாடியா நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
    Next Story
    ×