search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி என்பது தோல்வியடைந்த திட்டம் - அருண் ஜெட்லி
    X

    பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி என்பது தோல்வியடைந்த திட்டம் - அருண் ஜெட்லி

    மெகா கூட்டணி என்பது தோல்வியடைந்த ஒன்று, அது கொள்கைகளை கொலை செய்யவும், அரசுகளின் ஆயுளை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை என நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன.

    ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி குழப்பம் நிறைந்தது என நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்ற அவர், இது தொடர்பாக கூறியதாவது:–

    இந்தியாவில் மெகா கூட்டணிக்கு நீண்ட வரலாறு உண்டு. சந்திரசேகர், வி.பி.சிங், சரண் சிங், ஐ.கே.குஜ்ரால், தேவேகவுடா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் இதற்காக முயற்சி நடந்தது. இது, கொள்கைகளை கொலை செய்யவும், அரசுகளின் ஆயுட்காலத்தை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை ஆகும்.

    அந்த வகையில் மெகா கூட்டணி ஏற்கனவே முயற்சி செய்யப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, தோல்வியடைந்த திட்டம் ஆகும். மிகப்பெரிய கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய கருவும், அதைச்சுற்றி சிறிய குழுக்களும் இருக்க வேண்டும். ஆனால் உங்களிடம் அவை இல்லை. தகுதியில்லாத தலைவர்கள் அல்லது குற்ற வழக்குகளில் இருந்து தப்புவதற்காக கூட்டணி சேர முயலும் தலைவர்களை கொண்டு கூட்டணி அமைக்க முடியாது.

    அப்படி இது போன்ற ஒரு கூட்டத்தை நீங்கள் அமைத்தால், வலுவான தலைவரை கொண்ட ஒரு நிலையான அரசுக்கும், முழுவதும் குழப்ப நிலையை கொண்டிருக்கும் ஒரு கூட்டணிக்கும் இடையிலான போட்டியாகவே 2019 தேர்தல் இருக்கும். இதில் பா.ஜ.க நிச்சயம் வெற்றி பெறும்.

    சர்வதேச தேக்கநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருந்த போதும், இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் தேவைப்படும் நேரங்களில் இணக்கம், நிர்வாகம் மற்றும் கொள்கைகள் தேவைப்படுகிறது. இதற்கு குழப்பவாத கூட்டணிகள் உதவாது.

    வாராக்கடன்கள் அதிகரிப்பதற்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்த வி‌ஷயத்தில் சிலர் வளர வேண்டும் என நான் நினைக்கிறேன். கடந்த 2007–08 ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.18 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச தேக்க நிலை நிலவியதை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து 2014–ல் இது ரூ.55 லட்சம் கோடியாக உயர்ந்தது.

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வங்கிகள் கடன் வழங்கும் இலக்கை ஆண்டுதோறும் 31 சதவீதம் அதிகரித்தது. இதனால் திறனற்ற மற்றும் நிலையற்ற திட்டங்களுக்கு அதிக கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் இருந்துதான் வங்கி கொள்ளை தொடங்கி இருக்கிறது. எனவே இந்த உண்மையை காங்கிரஸ் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் ஆதார் மீதான அரசின் சட்டப்பூர்வ நோக்கத்தை கோர்ட்டு ஏற்றுக்கொண்டு உள்ளது. இதில் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை என உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுவதன் மூலம் இதை மீண்டும் கொண்டுவர முடியும்.

    ஓரினச்சேர்க்கை விவகாரத்தை அடிப்படை உரிமையாகவும், கருத்து சுதந்திரமாகவும் மாற்றியமைத்தால் பள்ளி விடுதி, சிறை, ராணுவ முகாம்களில் இந்த பாலியல் நடவடிக்கைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தை பொறுத்தவரை, குறிப்பிட்ட நடைமுறைகளில் இந்த உத்தரவை செயல்படுத்த முடியாது. ஏனெனில் இந்தியா போன்ற ஒரு பன்மைத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், இதன்மூலம் பல சமூக விளைவுகள் நேரிடக்கூடும். அப்படி இந்த உத்தரவில் உறுதியாக இருந்தால் அரசியல் சட்டம் 14 மற்றும் 21–ம் பிரிவுகளை அனைத்து மதங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
    Next Story
    ×