search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டம் - காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு
    X

    மோடி அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டம் - காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

    மோடி அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டம் நடத்த ராகுல் காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. #Congress #SecondFreedomStruggle #Modi #ModiGovernment #RahulGandhi
    சேவாகிராம்:

    மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டம் சேவாகிராமத்தில் உள்ள மகாதேவ் பவனில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. 1942-ம் ஆண்டு, மகாத்மா காந்தி அங்கு காரிய கமிட்டி கூட்டத்தை நடத்தினார். அதன்பிறகு இப்போதுதான் அங்கு இக்கூட்டம் நடந்தது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்கினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்திய சிந்தனைக்கும், அதன் ஆன்மாவுக்கும், உடலுக்கும் மகாத்மா காந்தி ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற கோஷத்தை எழுப்பினார். அது, வெறும் கோஷம் அல்ல, நமது வாழ்க்கை முறை.

    நரேந்திர மோடி அரசு, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக உள்ளது. வெறுப்பு, வன்முறை, பழிவாங்குதல், அச்சுறுத்தல், பிரித்தாளுதல், ஆரோக்கியமான விவாதத்தையும், மாற்றுக்கருத்தையும் நசுக்குதல் ஆகியவை கலந்த அரசியலை நடத்தி வருகிறது. அந்த அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    காந்தியையும், அவரது சிந்தனைகளையும் சீர்குலைத்தவர்கள், இப்போது காந்தியின் சீடர்கள் போல் வேடம் போடுகிறார்கள். அவர்கள், காந்தியின் மூக்குக்கண்ணாடியை விளம்பர பிரசாரத்துக்காக வாங்கலாம். ஆனால், அவர்களின் இட்டை வேடத்தை காங்கிரஸ் அம்பலப்படுத்தும்.

    டெல்லிக்கு சென்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி அதிகார போதையில் மிதக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் சேவாகிராமிலேயே நேற்று மதிய உணவு சாப்பிட்டனர். தாங்கள் சாப்பிட்ட தட்டுகளை, அவர்களே கழுவினர். இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

    முன்னதாக, வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்களுடன் பாத யாத்திரை சென்றார். பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட சர்க்கஸ் மைதானம் வரை சென்றார். 50 நிமிட நேரம் நடந்து அந்த இடத்தை அடைந்தார்.

    பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி பேசியதாவது:-

    மகாத்மா காந்தி, நாட்டை ஒன்றுபடுத்தினார். ஆனால், மோடியோ நாட்டை பிளவுபடுத்துகிறார். ஒரு சமுதாயத்துடன் மற்றொன்றை மோத விடுகிறார். ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்த கேள்விகளுக்கு மோடி பதிலளிக்க வேண்டும்.

    பணக்காரர்களின் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்த மோடி அரசு, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Congress #SecondFreedomStruggle #Modi #ModiGovernment #RahulGandhi
    Next Story
    ×