search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை: குமாரசாமி அறிவிப்பு
    X

    முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை: குமாரசாமி அறிவிப்பு

    முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #Karnataka #ChiefMinister #Kumaraswamy
    பெங்களூரு :

    பெங்களூருவில் மூத்த குடிமக்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டார். மேலும் கர்நாடகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மூத்த குடிமக்களுக்கு விருதுகளை வழங்கி முதல்-மந்திரி குமாரசாமி கவுரவப்படுத்தினார்.

    பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள். இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பகல் கனவு காண்கிறார்கள். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. 5 ஆண்டுகளையும் கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக நிறைவு செய்யும். விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.

    விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் வங்கி அதிகாரிகள் விவசாயி களிடம் கடன் கேட்டு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன். அவ்வாறு நெருக்கடி கொடுக்கும் வங்கி அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் நிம்மதியாக வாழ வேண்டும். மண்டியாவில் ஒரு விவசாயிக்கு கடனை திரும்ப செலுத்தும்படி வங்கி அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுபற்றி மண்டியா மாவட்ட கலெக்டரிடம் தகவல் கேட்டு அறிந்தேன்.



    அந்த விவசாயி கடந்த 2007-ம் ஆண்டு வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திரும்ப செலுத்தாததால் வங்கி சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் விவசாயி இருந்துள்ளார். இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி தற்போது கோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. அவருக்கு வங்கி சார்பில் கடன் வாங்கியதற்காக எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. ஆனால் வங்கி சார்பில் கடனை செலுத்தும்படி விவசாயிக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

    இந்த அரசு விவசாயிகள் மீது மட்டுமே அக்கறை காட்டுவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. அதுவும் தவறானது. விவசாயிகள் பிரச்சினைகளில் மட்டும் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை. முதியவர்கள், கர்ப்பிணிகள் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே எனது தலைமையிலான அரசின் நோக்கமாகும். இதற்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் வசிக்கும் முதியவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க தேவையான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் அமல்படுத்தப்படும். இந்த திட்டம் முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்பட்டு முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுவது, மாதம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதனால் விவசாயிகள் மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள அனைவரும் நிம்மதியாக வாழ இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதி.

    இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மந்திரி ஜெயமாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Karnataka #ChiefMinister #Kumaraswamy 
    Next Story
    ×