search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் நிறுத்தியிருக்கும் பக்தர்களின் கார்களை உடைத்து பொருட்களை திருடிய 2 பேர் கைது
    X

    திருப்பதியில் நிறுத்தியிருக்கும் பக்தர்களின் கார்களை உடைத்து பொருட்களை திருடிய 2 பேர் கைது

    திருப்பதியில் நிறுத்தியிருக்கும் பக்தர்களின் கார்களை உடைத்து பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery #arrest

    திருப்பதி:

    திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதியில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் திருட்டு, வழிப்பறி நடப்பதாகவும், பக்தர்களின் கார் கண்ணாடிகளை உடைத்து, அதில் வைத்திருக்கும் செல்போன்கள், கேமராக்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் செல்வதாகவும் போலீசாருக்குப் புகார்கள் வந்தன.

    திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்மொகந்தி, திருடர்களை பிடிக்க உத்தரவிட்டார். திருப்பதி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.பாஸ்கர்ரெட்டி தலைமையில் போலீசார் திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் திருப்பதி பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக ஊற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    இருவரும், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தொண்டமநாதம் கிராமத்தைச் சேர்ந்த ஜி.சிவாவேலுபிள்ளை (வயது 40) என்றும், ஒரு தனியார் பஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மற்றொருவர் தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் யாதவள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனு என்கிற ருத்ர‌ஷசீனு (23) எனத் தெரிய வந்தது.

    இருவரும் கூட்டாக சேர்ந்து திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் செல்போன்களை திருடியதாக கூறினர். பக்தர்களின் கார் கண்ணாடிகளை உடைத்து, அதில் வைத்திருக்கும் விலை உயர்ந்த செல்போன்கள், கேமராக்கள், வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை திருடி வந்துள்ளனர். கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது இருவரும் கூட்டாக சேர்ந்து 40-க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த 30 செல்போன்கள், 3 கேமராக்கள், 93 கிராம் எடையிலான வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேர் மீதும் திருப்பதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery #arrest

    Next Story
    ×