search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்ததற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
    X

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்ததற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்ததற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. #SupremeCourt #Justice #RanjanGogai
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா பணியில் இருந்து ஓய்வு பெற இருப்பதால், அவருக்கு பதிலாக தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருக்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகாய் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். தீபக் மிஸ்ராவின் பரிந்துரையின் பேரில் ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டார்.



    இதைத்தொடர்ந்து, ரஞ்சன் கோகாய் வருகிற அக்டோபர் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார்.

    இந்த நிலையில், ரஞ்சன் கோகாய் நியமனத்தை எதிர்த்து வக்கீல்கள் ஆர்.பி.லுத்ரா, சத்யவீர் சர்மா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர் (தற்போது ஓய்வுபெற்றுவிட்டார்), ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் தலைமை நீதிபதிக்கு (தீபக் மிஸ்ரா) எழுதிய கடிதம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அதில் உள்ள விவரங்களை வெளியிட்டு அவர்கள் தெரிவித்த கருத்துகள் நீதித்துறையின் மாண்பை சீர்குலைப்பதாக அமைந்து இருந்தது. நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கோர்ட்டில் தங்களுக்குள் இருக்கும் சில கருத்துவேறுபாடுகளை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.நீதித்துறையின் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி பகிரங்கமாக கருத்து தெரிவிப்பது அரசியல்சாசனத்துக்கு விரோதமானது மட்டுமின்றி நீதித்துறைக்கு பொருத்தமற்றதும், தவறானதும் ஆகும். எனவே புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், தற்போதுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் (புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டது) தாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் கூறி தள்ளுபடி செய்தனர்.  #SupremeCourt #Justice #RanjanGogai
    Next Story
    ×