search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் ஒரு பிராடு, மோசடியாக கொண்டு வரப்பட்டுள்ளது - நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பு
    X

    ஆதார் ஒரு பிராடு, மோசடியாக கொண்டு வரப்பட்டுள்ளது - நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பு

    ஆதார் சட்ட வழக்கில் தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதோடு அரசை கடுமையாக சாடினார். #AadhaarVerdict #JusticeChandrachud
    புதுடெல்லி:

    ஆதார் வழக்கில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே தீர்ப்பாக வழங்கினார்கள். இவர்கள் 3 பேருக்கும் சேர்த்து நீதிபதி சிக்ரி தீர்ப்பை வாசித்தார். மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் மாறுபட்ட தீர்ப்பை வழங்கவில்லை என்கிற போதிலும் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

    இதில் ஆதார் சட்டம் அரசியல்சாசனப்படி செல்லுபடியாகும். அரசின் சேவைகளைப் பெற ஆதார் அவசியம். அதேசமயம், ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி அரசின் சேவைகளை மக்களுக்கு அளிப்பதை நிறுத்தக்கூடாது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் இருந்து ஆதார் விவரங்களைப் பெறக்கூடாது என்று கூறி ஆதார் சட்டத்தில் 57-வது பிரிவை ரத்து செய்து பெருமபான்மை நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்தனர்.

    ஆனால், இதில் மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி டிஒய் சந்திரசூட் வழங்கினார். மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆதார் சட்டத்தை நிறைவேற்றிய விதமே தவறானது. புறவழியாக ஆதார் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சாடினார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

    ஆதார் சட்டத்தை நிதி மசோதாவாக மக்களவையில் நிறைவேற்றி இருந்திருக்கத் தேவையில்லை. அந்த மசோதாவை மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லாமல் மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றி ஆதார் சட்டத்தை கொண்டுவந்தது அரசியலமைப்புச் சட்டசத்துக்கு விரோதமானது. மோசடியாகும்.

    அரசியலமைப்புப் பிரிவு 110 பிரிவை மீறி நிறைவேற்றப்பட்டு இருப்பதால், ஆதார் சட்டத்தை ரத்து செய்யவும் முகாந்திரம் இருக்கிறது. இப்போது இருக்கும் ஆதார் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது எனக் கருத முடியாது.

    இன்றைய சூழலில் மொபைல்போன் மிக முக்கியமான கருவியாக மக்களின் வாழ்க்கையில் மாறிவிட்டது. செல்போனில் ஆதார் விவரங்களை இணைத்த விவகாரம் தனிநபர்களின் அந்தரங்கத்துக்கும், சுதந்திரத்துக்கும், சுய அதிகாரத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். மொபைல் சேவை நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களை திருத்தக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கி இருந்தது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்டத்தின்படி வங்கியில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரும் கடன் பெற்றவர்கள். அந்த அடிப்படையில்தான் வங்கியில் கணக்கு தொடங்கும் ஒவ்வொரு தனிமனிதர்களையும் தீவிரவாதிபோல் சித்தரித்து, கடன்காரர் போல் பாவித்துள்ளார்கள் இது மிகவும் கொடூரமானது.

    தனிமனிதர்களின் விவரங்களை ஒட்டுமொத்தமாகத் தனியார் நிறுவனங்கள் திரட்டுவதன் மூலம் அதை வேறு எந்தக் காரணங்களுக்காகவும் பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தனிமனிதரின் உரிமையின்றி, அனுமதியின்றி அவரின் விவரங்களை அடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.

    தகவல் சுதந்திரம், சுயஉரிமை, மற்றும் புள்ளிவிவரங்கள் பாதுகாப்பு ஆகியவற்றை மீறும்வகையில் ஆதார் திட்டம் இருக்கிறது. அரசின் சலுகைகளைப் பெற ஆதார் கார்டை கட்டாயக்கி இருப்பது, மக்களின் தனிப்பட்ட உரிமையைப் பறிப்பதாகும். குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆதார் வழங்கும் யுஐடிஏஐ நிறுவத்துக்கு இருக்கிறது. ஆனால், முறையான பாதுகாப்பு அம்சம் இல்லாமல் இருக்கிறது.

    இன்று இந்தியாவில் ஆதார் இல்லாமல் வாழமுடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது, இதுவே அரசியலமைப்புச்சட்டம் 14-வது பிரிவை மீறியது போன்றது. நாடாளுமன்றம் ஆதார் குறித்து சட்டம் இயற்ற உரிமை இருக்கும்போது, மக்களின் விவரங்களைப் பாதுகாக்காமல் இருந்தால், அது பல்வேறு உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும்

    இவ்வாறு நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
    Next Story
    ×