search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணத்தை மீறிய தவறான உறவு தொடர்பான வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
    X

    திருமணத்தை மீறிய தவறான உறவு தொடர்பான வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

    திருமணத்தை மீறிய தவறான உறவில் ஆண் மட்டுமே குற்றவாளியாக எடுத்துக்கொள்ளப்படும் சட்டப்பிரிவு 497-ஐ நீக்க வேண்டும் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்குகிறது. #SupremeCourt #Adultery #Section497
    புதுடெல்லி:

    திருமணம் ஆன பெண்ணுடன் அவரது கணவரின் சம்மதம் இன்றி வேறு ஒரு திருமணமான ஆண் பாலியல் ரீதியான தொடர்பு வைத்திருந்தால் விபசார சட்டத்தில் ஆண் மட்டுமே தண்டனைக்குரியவன். அந்த பெண்ணுக்கு தண்டனை கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 497 மற்றும் தொடர்புடைய குற்ற சட்டப்பிரிவு 198 (2) ஆகியவை இதனை வலியுறுத்துகிறது. 

    ஒரு குற்றத்தில் தொடர்புடைய ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்குவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது, அநீதியானது, சட்டவிரோதமானது, ஒருதலைப்பட்சமானது, அடிப்படை உரிமைகளை மீறுவது, பாலின சமநிலைக்கு மாறானது. எனவே இந்த சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் அல்லது பொதுவாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் விசாரணை முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. 

    முன்னதாக இவ்விவகாரத்தில் ஏற்கனவே மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கோரியது. அதில், திருமணமான பெண்ணுக்கு அவரது கணவர் அனுமதி இல்லாமலோ, அனுமதியுடனோ வேறு ஒரு திருமணமான ஆணுடன் உடலுறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரம் ஆகாது. 

    ஆனால் விபசாரம் தொடர்பான சட்டத்தில் அந்த ஆணுக்கு 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விபசார குற்றத்தில் அந்த பெண்ணுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. அப்படியிருக்க அந்த ஆணுடன் சேர்த்து அந்த பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்படாதது ஏன்? என்பதற்கு விளக்கம் தேவை என்று கேட்கப்பட்டது.

    அதற்கு, திருமணத்தை மீறிய தவறான உறவு விவகாரத்தில் பெண்களையும் குற்றவாளியாக்குவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், பிரிவு 497 திருமணத்தின் புனிதத்தன்மையை பாதுகாப்பதற்கும், திருமண பந்தத்திற்கு தீங்கு விளைவிப்பதை நீக்கவும் இயற்றப்பட்டது என மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
    Next Story
    ×