search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரசில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லை: பரமேஸ்வரா
    X

    காங்கிரசில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லை: பரமேஸ்வரா

    காங்கிரசில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பேட்டியளித்துள்ளார். #ministerParmeswara #Congress
    பெங்களூரு :

    கர்நாடகா துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இட ஒதுக்கீட்டு விஷயத்தில் அடித்தட்டு சமுதாயத்தினருக்கு உரிய நீதியை வழங்க வேண்டியது அவசியம். அந்த நோக்கத்தின் அடிப்படையில் முன்பு காங்கிரஸ் ஆட்சியில் பதவி உயர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்டதிருத்த மசோதா விரைவில் அமல்படுத்தப்படும்.

    இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். இந்த சட்டத்திருத்தம் இன்னும் அமலுக்கு வராததால், சமூக நலத்துறை மந்திரி பிரியங்க் கார்கே உள்பட அனைவருக்குமே வருத்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று (நேற்று) பிரியங்க் கார்கே என்னை வந்து சந்தித்து பேசினார். இந்த சட்டம் கர்நாடகத்தில் இன்றோ (அதாவது நேற்று) அல்லது நாளையோ (இன்று) அமலுக்கு வரும்.

    பெங்களூருவில் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை மூடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை காலத்தில் சாலைகளில் குழிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இந்த விஷயத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். பெரும்பாலான இடங்களில் சாலை குழிகளை மூடிவிட்டோம். நேற்று திடீரென மழை பெய்த காரணத்தால், சாலைகளில் மீண்டும் குழிகள் ஏற்பட்டுள்ளன.



    குழிகளை எண்ணி மூடுவது என்பது சாத்தியம் இல்லை. சாலைகளில் குழிகள் ஏற்படும்போது, அதை மூடுகிறோம்.

    பா.ஜனதாவுக்கு ஆட்சி அதிகார தாகம் உள்ளது. அதனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதனால் அக்கட்சியினர் அமைதியாக இருக்காமல் ஏதாவது சிக்கலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பா.ஜனதாவினர் அந்த முயற்சியில் வெற்றி பெற மாட்டார்கள். இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

    காங்கிரசில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. சில எம்.எல்.ஏ.க்கள் கோவிலுக்கு சென்றனர். அதை வேறு ரீதியில் மக்களிடையே எடுத்துக்கூறி குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் சுதாகர் மற்றும் எம்.டி.பி.நாகராஜ் ஆகியோருக்கு அதிருப்தி இருப்பது உண்மை தான். அவர்களின் தொகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. அதை நாங்கள் சரிசெய்வோம். மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரியாக வேண்டும் என்று ஆசை இருப்பது சகஜமானது. இதை தவறு என்ன சொல்ல முடியாது.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார்.

    இதைதொடர்ந்து அவரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி குமாரசாமி பாரபட்சமாக தொகுதி நிதி ஒதுக்கீடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், ‘காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை முதல்-மந்திரி குமாரசாமி பாரபட்சத்துடன் பார்ப்பதாக சொல்வது பொய். எனக்கு தெரிந்தவரையில் அவர் அனைவரையும் சரிசமமாக பார்த்து நிதி ஒதுக்கீட்டை செய்கிறார்‘ என்றார். #ministerParmeswara #Congress
    Next Story
    ×