search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இருந்தது - பாஜக விளக்கம்
    X

    காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இருந்தது - பாஜக விளக்கம்

    பாகிஸ்தான், சீனாவின் விளையாட்டுப் பொருளாக ராகுல் காந்தி மாறிவருவதாக குற்றம்சாட்டியுள்ள பா.ஜ.க., காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இருந்ததாக தெரிவித்துள்ளது. #RSPrasad #RafaleDeal #RahulGandhi
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.
     
    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து கடந்த 2015-ம் ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சியில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் விமானத்துறையில் முன் அனுபவம் இல்லாத அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும், அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக, டெல்லியில் இன்று காரசாரமாக பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடராக மாறிவிட்டதாக குறிப்பிட்டார்.

    இதற்கு பதிலடி தந்துள்ள பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான ரவி சங்கர் பிரசாத், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, ராகுல் காந்தியைத் தவிர எந்த கட்சியின் தலைவரும்  இந்த நாட்டின் பிரதமரை இவ்வளவு மட்டரகமாக விமர்சித்தது இல்லை. தலைவர் பதவிக்கான தகுதி அவருக்கு கிடையாது. குடும்பத்தின் பெயரை வைத்து இன்று அவர் தலைவர் பதவியில் இருக்குறார் என்று தெரிவித்துள்ளார்.

     
    ரபேல் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுகுழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்னும் ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்த ரவி சங்கர் பிரசாத், அரைகுறை விவகாரங்களை வைத்துகொண்டு பேசும் ஒருவரை திருப்திப்படுத்துவதற்காக இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

    கடந்த 2012-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசின் ஆட்சிக் காலத்திலேயே  ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இடம் பெற்றிருந்தது. ரபேல் போர் விமானம் தொடர்பாக விபரங்கள் தேவை என்பதன் மூலம் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் கையில் விளையாட்டுப் பொருளாக அவர் மாறிவிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #RSPrasad #RafaleDeal #RahulGandhi
    Next Story
    ×