search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயாவதி நடவடிக்கையால் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி உருவாக வாய்ப்பு
    X

    மாயாவதி நடவடிக்கையால் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி உருவாக வாய்ப்பு

    சத்தீஷ்காரை தொடர்ந்து மத்திய பிரதேச தேர்தலிலும் மாயாவதி, அணி மாறுவதால் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. #Mayawati
    லக்னோ:

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இதற்காக இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் பல்வேறு மாநில கட்சிகளுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப இந்த கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்து பா.ஜனதாவை எதிர்த்து வருகின்றன.

    ஆனால் விரைவில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக களமிறங்கும் முடிவை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி எடுத்துள்ளார். அதன்படி சத்தீஷ்கார் மாநில தேர்தலில், அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியையும், தொகுதி பங்கீட்டையும் அவர் இறுதி செய்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி, அங்கு 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது. மேலும் அரியானாவிலும் இந்திய தேசிய லோக்தளத்துடன் கூட்டணிக்கு அந்த கட்சி தயாராகி விட்டது.

    இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணியை அமைக்க பகுஜன் சமாஜ் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதை கட்சியின் மூத்த தலைவர் ஒருவரும் உறுதி செய்தார். 3-வது அணி தொடர்பாக இடதுசாரிகள், சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ்-பா.ஜனதாவை எதிர்க்கும் பிற மதசார்பற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

    அதேநேரம் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் தங்கள் மரியாதைக்கு குறைவாக எதையும் ஏற்கமாட்டோம் எனவும் அவர் கூறினார்.

    மாயாவதியின் இந்த திடீர் நடவடிக்கையால் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது. அப்படி 3-வது அணி உருவானால் மாநில தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கே வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். #Mayawati #BahujanSamaj
    Next Story
    ×