search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
    X

    காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு

    காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. #SupremeCourt #CauveryWater
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள தொழிற்சாலைகள், நகரங்களில் இருந்து கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கின்றன.

    இதனால் ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகாவில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

    இந்த கழிவுகளால் காவிரி கரையோரம் வாழும் தமிழக மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகிறது.

    எனவே காவிரியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், கழிவுகள் கலப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை மாதம் 16-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இதில், கர்நாடகாவில் இருந்து காவிரியில் கழிவுகள் கலக்கப்படவில்லை என்றும், தென்பெண்ணையாறு, அர்க்காவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள்தான் மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பாய்கிறது என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த அறிக்கை மீது ஏற்கனவே தமிழக அரசும், கர்நாடகா அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்தநிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் வக்கீல் ஜி.உமாபதி ஆஜரானார்.

    விசாரணை தொடங்கியதும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிக்கை மீது எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.  #SupremeCourt #CauveryWater
    Next Story
    ×