search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் - பிரதான கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
    X

    காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் - பிரதான கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    ஜம்மு-காஷ்மீர் மாநில உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அம்மாநில பாரதிய ஜனதா கட்சி 380 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. #Kashmirlocalbodypolls #BJP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா கடந்த ஞாயிறு அன்று அறிவித்தார்.

    இதற்கிடையே, காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 380 பேர் அடங்கிய இந்த பட்டியலில் 120 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த உள்ளாட்சித் தேர்தலில் 17 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிட முதலில் காங்கிரஸ் தயங்கியது. தற்போது போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    அம்மாநில பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. #Kashmirlocalbodypolls 
    Next Story
    ×