search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்- கவர்னர் பரிந்துரை
    X

    காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்- கவர்னர் பரிந்துரை

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலின்போது பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் 10 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் செய்ய கவர்னர் பரிந்துரைத்துள்ளார். #Kashmirlocalbodypolls
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

    தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அங்கு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீரில் காலியாக உள்ள சுமார் 34 ஆயிரம் உள்ளாட்சி பதவி இடங்கள் நிரப்பப்படும்.

    காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அட்டூழியம் உள்ளதால் பாதுகாப்பு கருதி 4 கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உள்ளனர். முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந்தேதி நடத்தப்படும். இரண்டாவது கட்ட தேர்தல் 10-ந்தேதி, மூன்றாவது கட்ட தேர்தல் 13-ந்தேதி, நான்காவது கட்ட தேர்தல் 16-ந்தேதி நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை 20-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த உள்ளாட்சித் தேர்தலில் 17 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிட முதலில் காங்கிரஸ் தயங்கியது. தற்போது போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.


    இதனால் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேட்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் காப்பீடு செய்ய காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் பரிந்துரைத்துள்ளார். அனைத்து வேட்பாளர்களும் ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும் என்று அவர் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

    என்றாலும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் அறிவித்துள்ளன. கவர்னரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. #Kashmirlocalbodypolls #JKGovernor #satyapalmalik
    Next Story
    ×