search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீல் உடைப்பு விவகாரத்தில் டெல்லி பாஜக தலைவர் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
    X

    சீல் உடைப்பு விவகாரத்தில் டெல்லி பாஜக தலைவர் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

    டெல்லியில் சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்த விவகாரத்தில் டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி 25-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ManojTiwari #Delhisealingdrive #Gokalparisealbreaking
    புதுடெல்லி:

    டெல்லியில் முறையான அனுமதி பெறாமல் கட்டிடங்களும் வீடுகளும் கட்டப்பட்டு வருவதாகவும், முறையான அனுமதி பெறாமல் வீட்டிலேயே தொழில் செய்வதாகவும் புகார்கள் எழுந்ததையடுத்து சுப்ரீம் கோர்ட்  கடும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், டெல்லி நகராட்சி இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தது, இதனையடுத்து உச்ச நீதிமன்றம் மீண்டும் டெல்லி நகராட்சியை எச்சரித்து நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

    இல்லையெனில், கோர்ட் அவமதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தது. இதனையடுத்து அங்கு அனுமதி பெறாத கட்டிடங்கள், வீடுகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    அவ்வகையில், கோகல்புரி பகுதியில் இவ்வாறு ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்த ஒரு வீட்டின் பூட்டை டெல்லி பா.ஜ.க. தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோஜ் திவாரி கடந்த வியாழக்கிழமை உடைத்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் மனோஜ் திவாரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சீல் வைப்பு நடவடிக்கையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட குழுவினர் மனோஜ் திவாரியின் நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.



    இதைதொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இன்று தாமாக முன்வந்து நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான மனோஜ் திவாரி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காமல் இதுபோல் செயல்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், சீல் வைக்கப்பட்ட பூட்டை உடைத்தது ஏன்? என்று வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மனோஜ் திவாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையில், போலீசார் வழக்குப்பதிவு செய்த பின்னர் நேற்றும் கோகல்புரி பகுதிக்கு சென்ற மனோஜ் திவாரி இன்னொரு வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை உடைக்க முயன்றார். அவரை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ManojTiwari #Delhisealingdrive #Gokalparisealbreaking
    Next Story
    ×