search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரிபுரா முதல்வரை கொல்ல போதை மருந்து மாபியாக்கள் திட்டம்- பாதுகாப்பு அதிகரிப்பு
    X

    திரிபுரா முதல்வரை கொல்ல போதை மருந்து மாபியாக்கள் திட்டம்- பாதுகாப்பு அதிகரிப்பு

    திரிபுரா மாநில முதல்வரை கொலை செய்வதற்கு போதை மருந்து மாபியாக்கள் திட்டம் தீட்டிய தகவல் வெளியானதையடுத்து, அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #TripuraCM #BiplabKumarDeb
    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் பாஜக-திரிபுரா சுதேச மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவைச் சேர்ந்த பிப்லப் குமார் தேவ் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்த கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து போதை மருந்து மற்றும் கஞ்சா கடத்தல் கும்பல்களை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த 6 மாதங்களில் மட்டும் 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதை மருந்துகளை தவறான செயல்களுக்கு பயன்படுத்துதல் மட்டுமின்றி பல சட்டவிரோத செயல்களும் கணிசமாக குறைந்துள்ளன.


    முதல்வர் பிப்லப் குமார் தேவின் இந்த கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளால் போதை மருந்து கடத்தல் கும்பல்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். அத்துடன் அவரை கொலை செய்யவும் திட்டம் தீட்டியுள்ளனர். போதை மருந்து மாபியாக்கள் மியான்மரில் ஒன்று கூடி, முதல்வரை கொலை செய்வற்கு கூலிப்படையை நியமிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து முதல்வருக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி திரிபுரா அரசுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியது. முதல்வருக்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அறிவுறுத்தலைத் தொடர்ந்து, இசட் பிரிவு பாதுகாப்பு அளிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன. இதுதவிர உளவுத்துறை தகவல்களையும் உடனுக்குடன் பெற்று அதன் அடிப்படையில் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மாநிலத்திற்குள் மட்டுமின்றி மாநிலத்திற்கு வெளியிலும் அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ரஜிப் பட்டாச்சார்ஜி கூறினார். #TripuraCM #BiplabKumarDeb #DrugMafias
    Next Story
    ×