search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
    X

    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. #KartiChidambaram #SupremeCourt #AircelMaxis
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபையின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் தனியாக முறைகேடு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.



    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் சார்பில், வர்த்தக ரீதியாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    கார்த்தி சிதம்பரத்தின் இந்த கோரிக்கைக்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை கார்த்தி சிதம்பரம் தவறாக பயன்படுத்துவதாகவும், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும், அதனால் இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கார்த்தி சிதம்பரம் கேட்டுக்கொண்டபடி அவர் செப்டம்பர் 20-ந்தேதியில் (நாளை) இருந்து 30-ந்தேதி வரை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். அத்துடன் அவருடைய விமான பயண திட்டம் குறித்த விவரங்கள், நாடு திரும்பும் நாள் குறித்த விவரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வெளிநாட்டு பயணம் முடிந்து இந்தியா திரும்பிய பிறகு அவர் தனது பாஸ்போர்ட்டை அமலாக்கத்துறை இயக்குனரகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.  #KartiChidambaram #SupremeCourt #AircelMaxis
    Next Story
    ×