search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் ரூ.25½ கோடி செலவில் சீரமைப்பு பணி - தேவசம்போர்டு தலைவர் தகவல்
    X

    சபரிமலையில் ரூ.25½ கோடி செலவில் சீரமைப்பு பணி - தேவசம்போர்டு தலைவர் தகவல்

    கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சபரிமலை பம்பை நதி பாலம் உள்ளிட்ட பக்தர்கள் செல்லும் வழித்தடத்தை ரூ.25½ கோடி செலவில் சீரமைக்க இருப்பதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். #sabarimala
    திருவனந்தபுரம்:


    கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதில் சபரிமலையில் உள்ள பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக பம்பையில் இருந்து சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் இருமுடி கட்டு சுமந்து செல்லும் சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. பல இடங்களில் சாலைகள் இருந்த தடமே தெரியாமல் போய்விட்டது.

    பம்பை நதியில் கட்டப்பட்டு இருந்த பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது பம்பையில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரட்டாசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடையும் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்களும் கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.


    பெரும் சிரமத்திற்கு இடையேதான் பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசிக்கும் நிலை உள்ளது. வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி மண்டல பூஜை தொடங்க உள்ளது. அப்போது நாடுமுழுவதும் இருந்து சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்பதால் அதற்குள் சபரிமலையில் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியது உள்ளது.

    இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் சபரிமலைக்கு சென்று அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தற்போது சபரிமலையில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளையும் முழுமையாக மண்டல பூஜைக்கு முன்பு முடிக்க திட்டமிட்டுள்ளோம். அய்யப்ப பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இவற்றை சீரமைக்க ரூ.25½ கோடி தேவைப்படும். இதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைந்து பணிகள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sabarimala
    Next Story
    ×