search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் தனது இயல்பை எப்போதும் மாற்றிக்கொள்ளாது - ராஜ்நாத் சிங் கருத்து
    X

    பாகிஸ்தான் தனது இயல்பை எப்போதும் மாற்றிக்கொள்ளாது - ராஜ்நாத் சிங் கருத்து

    பாகிஸ்தான் தனது இயல்பை எப்போதும் மாற்றிக்கொள்ளாது என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். #RajnathSingh #Pakistan #India
    ஜம்மு:

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கு சென்றார். அங்கு ‘விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை திட்டம்’ என்ற ஸ்மார்ட் வேலி திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.

    பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி, மரபை உடைத்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்தார். ஆனால், பாகிஸ்தான் எப்போதும் போல்தான் இருக்கிறது. அதனிடம் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை.



    பாகிஸ்தான் தனது இயல்பை எப்போதும் மாற்றிக்கொள்ளாது. மாற்றிக்கொள்ளவும் முடியாது. அண்டை நாடுகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிப்பதாக சில கட்சிகள் அறிவித்துள்ளன. அவர்கள் அதை கைவிட்டு விட்டு, தேர்தலில் பங்கேற்க வேண்டும். மக்களை சந்திக்கவும், உரையாடவும் இத்தகைய தேர்தல்கள்தான் வழிவகுக்கின்றன.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

    இந்தியாவில் முதல்முறையாக ‘ஸ்மார்ட் வேலி’ திட்டம், ஜம்முவில் நேற்று தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் எல்லையில் 2 ஆயிரத்து 26 கி.மீ. தொலைவுக்கு இந்த வேலி அமைக்கப்படுகிறது. லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த வேலிகள், பல்வேறு நவீன வசதிகளை கொண்டுள்ளன. இந்த வசதிகளை பயன்படுத்தி, கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எல்லையை கண்காணிக்கலாம். ஏதேனும் ஊடுருவல் முயற்சி நடந்தால், அதை முறியடிக்கலாம்.

    இந்த திட்டம் குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, இந்த ஸ்மார்ட் வேலி திட்டத்தை எல்லை காக்கும் பணியில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். மோசமான வானிலை நிலவும் போது கூட நமது ராணுவ வீரர்கள் எல்லையில் நிற்க வேண்டி இருந்தது. அதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.

    இந்த திட்டம், அவர்களின் மன அழுத்தத்தை போக்குவதுடன், அவர்களின் பணி நேரத்தையும் குறைக்கும். அத்துடன், எல்லையை மிகவும் பாதுகாப்பானதாக ஆக்கும். இதுபோன்ற வேலி, அசாம் மாநில எல்லையிலும் போடப்படும்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.  #RajnathSingh #Pakistan #India
    Next Story
    ×