search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.6 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி - மல்லையா மீது விரைவில் குற்றப்பத்திரிகை
    X

    ரூ.6 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி - மல்லையா மீது விரைவில் குற்றப்பத்திரிகை

    ரூ.6 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக, விஜய் மல்லையா மீது சி.பி.ஐ. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. #VijayMallya #CBI #Chargesheet
    புதுடெல்லி:

    பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது சி.பி.ஐ. 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

    ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.900 கோடி கடன் பெற்று விட்டு திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக 2015-ம் ஆண்டு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளிடம் ரூ.6 ஆயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு, திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக 2016-ம் ஆண்டு ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    ரூ.6 ஆயிரம் கோடி மோசடி பற்றிய வழக்கில், முதல்கட்ட விசாரணை முடிந்து விட்டது. எனவே, ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். அதன்பிறகும், விசாரணை தொடர்ந்து நடக்கும்.

    இந்த குற்றப்பத்திரிகையில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் பதவிகளில் இருந்த விஜய் மல்லையா, ஏ.ரகுநாதன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்படுவர். அதுபோல், கடன் கொடுக்கும் பணிகளை கவனித்த வங்கி உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்றுவிட்ட வங்கி அதிகாரிகள் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்படுவர். அவர்கள் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    அதுபோல், கடன் கொடுக்குமாறு வங்கி அதிகாரிகளை மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் நிர்பந்தம் செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அவர்களின் பங்கு பற்றியும், எந்த அளவுக்கு பங்கு இருந்தது என்றும் ஆய்வு செய்து வருகிறோம்.

    விஜய் மல்லையா எந்த காரணத்துக்காக கடன் வாங்கினாரோ, அதற்கு பணத்தை செலவிடாமல், வேறு காரியங்களுக்கு செலவிட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #VijayMallya #CBI #Chargesheet 
    Next Story
    ×